Tuesday, November 12, 2019

என்னை கவர்ந்த மால்நாடு ஓட்டம்.. 80 கி.மீ



ஓட்டத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சில கனவு ஓட்டங்கள் இருக்கும்.. எனக்குள்ளும் நிறைய இருக்கிறது.
அதில் ஒன்று பெங்களூர் அருகே மால்நாடு சிக்மகளூர் மலையில் காபி தோட்டத்தில் நடைபெறும் அல்ட்ரா ட்ரையல் என்ற தொலைதூர ஓட்டம்.
சென்ற ஆண்டு 50 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்திருந்தேன். ஆனால் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்துகொள்ள இயலாமல் போனது. அந்த வேட்கையை கொல்லிமலை மற்றும் பெங்களூர் TROT 11 அல்ட்ரா ஓட்டங்களில் முறையே 52, 50 கி.மீட்டர்கள் ஓடி ஓரளவு தணித்துக்கொண்டேன். ஆனாலும் இந்த மால்நாடு மீதிருந்த மோகம் குறையவில்லை. ஆதலால் இந்த ஆண்டு எப்படியும் கலந்துகொள்வது என முடிவு செய்திருந்தேன்.

பதிவு பற்றிய அறிவிப்பு வந்த இரண்டாவது நாளிலேயே 80 கி.மீ ஓட பதிவு செய்தேன். காரணம் பதிவுகள் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதாலும், இதுவே எனது அதிகபட்ச தூரமாக
இருக்கப்போகிறது என்பதாலும். முன்னரே இரண்டு அல்ட்ரா ஓட்டங்களை முடித்திருந்தாலும் ஏற்கனவே மால்நாடு அல்ட்ராவில் ஓடிய நண்பர்களின் பின்னூட்டங்கள் என்னை மால்நாடு நோக்கி இழுத்தது.

கோவை சரவணம்பட்டி ஓட்டக்குழு நண்பர்கள் இணைந்திருந்த ஒரு குழுவில் என்னையும் இணைத்துக்கொண்டு "கேப்டன்" அருணன் தலைமையில் தங்கும் இடம், போக்குவரத்து போன்றவைகளை 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்தோம்.
அவ்வப்போது ஓரளவு பயிற்சிகளோடு இருந்தாலும் கடைசியாக ஓடிய நீண்ட ஓட்டம் கோவை வோடபோன் மாரத்தானில் 21 கி.மீ. ஆனாலும் கடைசி சில நாட்களில் ஓடும் ஓட்டங்கள் தான் நமக்கு நம்பிக்கை தரும். நமக்கான ஓடும் தகுதியை உறுதி செய்யும். அந்த வகையில் பயிற்சிக்காக மேம்பாலத்தில் ஓடும்போது கால் தடுக்கி விழுந்து இடது கால் முட்டியிலும் , வலது கை மணிக்கட்டிலும் காயம் ஏற்பட பதட்டம் தொற்றியது. காரணம் கொல்லிமலை அல்ட்ரா 2018 ல் 52k பதிவு செய்து கிளம்பும் இரண்டு நாட்கள் முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து சறுக்கி விழுந்து அடிபட்டு ஓட முடியாமல் போனது. இப்போது அடிபட்ட இடம் அதே காலில் முட்டிக்கு சிறிது கீழாக... பட்ட காலிலே படும் என்பது இதுதானோ..? ஆனாலும் ஓட முடிகிறதா? என்று என்னை சோதிக்கும் முகமாக தொடர்ந்து 9 கி.மீ ஓடி எனது கடைசி மால்நாடுக்கான பயிற்சி ஓட்டத்தை 12 வது கி.மீட்டரில் நம்பிக்கையோடு முடித்தேன்.

ஓட்டம் நவம்பர் 2 சனிக்கிழமை என்பதால் அக்டோபர் 31 வியாழக்கிழமை இரவு கோவையிலிருந்து வந்த நண்பர்களோடு சேலம் ஜங்ஷனில் நடுநிசியில் இணைந்துகொண்டேன்.
காலை 8.00 பிரூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் தங்கும் விடுதியின் வாகனம் மூலமாக 1:30 மணிநேரம் பயணித்து பல்லாவரா என்ற இடத்தில் உள்ள தங்கும் விடுதியை அடைந்தோம். இங்கிருந்து 16 கி.மீ தொலைவில் ஓட்டம் நடைபெறும் சிக்மகளூர் காபி எஸ்டேட் கொண்ட மலை.
காலை உணவு முடித்துவிட்டு அருகே 3 கி.மீ தொலைவில் இருந்த கேலிஹட்டி அருவிக்கு பயணித்து என்னைத்தவிர அனைவரும் குளித்து திரும்பினோம். கால் காயம் மற்றும் மிகக்குளிர்ந்த நீர் என மறுநாள் ஓட்டத்தை நினைத்து ஆவலை அடக்கி தவிர்த்தேன்.




மதிய உணவு முடித்துவிட்டு அறையில் உறங்கி ஓய்வெடுத்த பின் நேரமே சென்று இரவு உணவையும் முடித்துவிட்டு மறுநாள் ஓட்டத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து தயாரானோம். கடந்த வாரம் முழுவதும் பெய்த மழை மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் பற்றி சொன்ன தகவல்கள் மிக சவாலாகவும் மனதில் ஒரு பயம் கலந்த பதட்டத்தையும் தர தவறவில்லை. அதுவும் அந்த அட்டைகள் சாதாரணமாக நம் கால்களில் ஒட்டிக்கொண்டு இரத்தம் உறிஞ்சும் எனவும் அவ்வாறு உறிஞ்சும் போது நமக்கே தெரியாது எனவும் ஏற்பாட்டாளர்கள் சொல்லியபோது சிலிர்த்தது. இதை தவிர்க்க உப்பு, மூக்குப்பொடி, தீப்பெட்டி, தேங்காய்எண்ணெய் மற்றும் டெட்டால் என பொருட்களை பட்டியலில் சேர்த்தனர்.
அதிகாலை 2:20 க்கு எழுந்து தயாராகி நண்பர்கள் தயாராக வைத்திருந்த டெட்டால் தேங்காய்எண்ணெய் கலந்த கரைசலை ஷூ மேல் தடவி 3:50 க்கு காத்திருந்த பிரத்யேக பேருந்தில் ஏறி 5:15 மணிக்கு ஓட்டம் தொடங்கும் இடத்தை அடைந்தோம். முக்கியமாக அந்த காபி தோட்டங்களுக்கு பிற வாகனங்கள் அனுமதி கிடையாது.
அந்த நேரத்திலும் சிறிது பசியோடு சென்ற எனக்கு ஆச்சரியமாக அருமையான உணவு காத்திருந்தது. சுவையான உணவை தேவையான அளவு உண்டு 6:45 மணிக்காக காத்திருந்தேன். 110 கி.மீ ஓடும் ராஜ் மற்றும் தமிழ் இருவரும் 6:30 க்கு ஓட்டத்தை தொடங்கினர். அடுத்த 80 கி.மீ ஓடும் வரிசையில் நானும் சக்தியும்.. சரியாக 6:45 க்கு ஆரவாரத்தோடு ஓடத்தொடங்கினோம். எங்களுக்கு அதாவது 80 கி.மீ ஓட்டத்தை முடிக்க 15 மணிநேரம் நிர்ணயித்திருந்தனர். அதற்குள் 80 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும். அதாவது 30 வது கி.மீட்டரை 11:45 க்குள்ளும் 50 வது கி.மீட்டரை 4:45 மணிக்குள்ளும் 80 கி.மீட்டரை இரவு 9:45 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும். இந்த 15 மணி நேரத்திற்குள்ளாகவே நமது உணவு நேரம், ஓய்வெடுக்கும் நேரம் என அத்தனையும் அடங்கும்.




முதல் 4 கி.மீ தொலைவை தார் சாலை என்பதால் மிகவும் மங்களகரமாக வழக்கமான வேகத்தில் கடந்தோம். அதிக தொலைவை கடக்க வேண்டுமெனில் மெதுவாகவும் சீராகவும் ஓட வேண்டும் என்ற திட்டத்தோடு ஓடிக்கொண்டிருந்தோம் இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்பதை அறியாமல்..

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சராசரியான ஓட்டக்காரர்களால் மணிக்கு 6 கி.மீ தான் ஓடமுடியும் என்றார்கள்.. நாங்கள் இருவரும் 3 மணிநேரத்தில் 21வது கி.மீட்டரில் இருந்த ஓய்வு மையத்தை அடைந்திருந்தோம். இந்த மையத்தில் ஓய்வு மற்றும் காலை சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்குள்ளாக இரண்டு இடங்களில் விழுந்து எழுந்திருந்தேன். காலில் காயம் படாமல் இருக்க ஏற்கனவே காயம்பட்ட கைகளை ஊன்றி சமாளித்ததில் இடது மணிக்கட்டிலும் கையிலும் லேசான வலியும் வீக்கமும் ஆரம்பித்தது.
பசுமை போர்த்திய இயற்கையின் அழகை முழுமையாக ரசித்தபடி மழையால் ஆங்காங்கே தோன்றியிருந்த உடனடி அருவிகளை பார்த்தவாறு போட்டோ எடுத்துக்கொண்டே ஓடிக்(நடந்து)கொண்டிருந்தோம்.
மிகப்பெரிய பள்ளத்தாக்குகளின் ஓரமாக ஓடுபாதைகள் இருப்பதை ஒருபுறம் ரசித்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்பதால் ஒருவித பயத்தோடே அந்த பகுதிகளை கடக்க முடிந்தது.




அந்த பகுதியில் பல நாட்கள் தொடர்மழைக்கு பிறகு எங்களுக்காகவே தலைகாட்டிய சூரியன் தன் பங்குக்கு சுட்டது.
ஓடு பாதைகளில் விழுந்து கிடந்த பெரிய மரங்கள், கரடுமுரடான கற்கள் பதித்த குறுகிய சாலைகள், குறுக்கிட்ட நீரோடைகள் என அனைத்தையும் தாண்டி ஓடினோம்.
சாதாரணமாக ஓடும்போது நமக்கு தேவையான சக்தியை விட இந்த மலைப்பாங்கான இடங்களில் ஓடும்போது பலமடங்கு சக்தி தேவைப்படும். மேல்நோக்கிய பாதைகளில் ஏறும்போதும், சேறும் சகதியும் நிறைந்த இடங்கள் நமது ஷூக்களை கவ்வி இழுக்கும் போது அதை விடுவிக்க இன்னும் கூடுதல் சக்தி அவசியம். இந்த சேறும் சகதியும் நன்கு வளர்ந்திருந்த ஈரமான புற்கள் மீது கலந்து ஏதோ மண்பாண்டம் செய்ய களிமண் கலந்து வைத்தது போல இருந்தது. வழுவழுவென்று ஷூ-விற்கு பிடிமானம் இல்லாமல் விழுந்த இடங்கள் நிறைய.
உதவி மையங்கள் அதிக தொலைவுகளில் இருந்தன. குறைந்த பட்சம் 6 கி.மீ தொலைவிலும் அதிகபட்சம் 11 கி.மீ தொலைவிலும் அமைத்திருந்தார்கள். சில உதவி மையங்களுக்கு தேவையான தண்ணீர் முதலான பொருட்களை தலைச்சுமையாக கொண்டு வந்திருந்தார்கள்.







உதவி மையங்கள் தூரமாக இருந்ததால் கண்டிப்பாக ஒவ்வொரு மையங்களிலும் தேவையான அளவு எடுப்பதும் கைகளில் கொண்டு செல்ல பாட்டில், முதுகில் சுமக்கும் நீர் உறிஞ்சும் பைகளில் நிரப்பிக்கொள்வதும் மிக அவசியமானது.

30 கி.மீட்டர் செக் பாயிண்ட் மற்றும் ஓட்டம் தொடங்கிய இடமான 50 கி.மீட்டர் செக் பாயிண்ட் இரண்டையும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே அடைந்திருந்தோம். இந்த இடத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட்ட உடனே ஏற்கனவே நனைந்து சேறு பூசியிருந்த ஷூக்கள், துணிகளை மாற்றிக்கொண்டு அடுத்த 30 கி.மீ இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தோம். இந்த இடத்தில் நண்பர்கள் 30 கி.மீ பாதை பற்றி கொடுத்த தகவல்கள் பிரமிப்பையும் பயத்தையும் ஒருசேர அதிகப்படுத்தின. அதுவும் இரவு நேரம், யாருமற்ற அடர்ந்த காடுகள், இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள், 10 கி.மீ க்கு ஒரு உதவி மையம் என அத்தனையையும் நினைக்கையில் வயிற்றில் அமிலம் சுரந்தது தெரிந்தது. இதிலும் 110 கி.மீ ஓட்டத்தில் களமிறங்கிய ராஜ், தமிழ் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் 50 கி.மீட்டரோடு தங்களது ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது பயத்தை அதிகமாக்கியது. அவர்களின் சில ஆலோசனைகளோடு முடிந்தவரை முயற்சி செய்யலாம் என்றவாறே சக்தியும் நானும் தொடர்ந்தோம். இந்த காபி தோட்டங்களில் நுழைந்தபின்னர் ஏதேனும் அசம்பாவிதம் என்றால் யாரையும் உதவிக்கு கூட அழைக்க முடியாது. ஆனாலும் "எவ்வளவோ பாத்துட்டோம்.. இத பாக்க மாட்டோமா என்ற அசட்டு தைரியம் " எங்களை முன்னோக்கி செலுத்தியது.






ஓடும்போது சக்தியிடம் சொன்னது.. "எந்த இடர்பாடு வந்தாலும் இடையில் ஓட்டத்தை முடிக்கக்கூடாது.. குறிப்பிட்ட 15 மணி நேரத்தில் முடிக்க முடியவில்லை என்றாலும் 80 கி.மீ தொலைவை நிறைவு செய்யவேண்டும். இதில் உறுதியாக இருப்போம்" என்றேன். 53 கி.மீ ஓடியதும் முதல் தடை மழை.. ஏற்கனவே மழை பற்றிய அறிவிப்பு இருந்ததால் அதற்காகவே வாங்கி வைத்திருந்த மழைக்கோட்டை அறையிலேயே மறந்துவிட்டு வந்தது அப்போதுதான் உறைத்தது. 5 நிமிடம் பெய்த மழை தூறலாகி நின்று எங்களுக்கு வழிவிட்டது. ஆனால் ஓடும் பாதையை நனைத்து இன்னும் அதிகமாக வழுக்க ஆரம்பிக்க... தவறாமல் இங்கும் இரண்டு இடங்களில் விழுந்து உருண்டு தப்பினேன். சக்தியும் இதற்கு தப்பவில்லை... 'ப்ரோ.. பாத்து இறங்குங்க' என்று என்னை சொல்லிக்கொண்டே விழுந்தது அந்த ரணகளத்திலும் சிரிப்பை வரவழைத்தது.







நன்றாக இருட்ட ஆரம்பித்தது. நானும் சக்தியும் தலையில் டார்ச் அணிந்துகொண்டு ஓட ஆரம்பித்தோம். 60 கி.மீ தூரம் கடக்கும்வரை ஒத்துழைத்த உடலும் மனமும் ஒருசேர ஓட மறுத்தன. உடம்பின் அனைத்து சக்தியும் வடிந்திருந்தது. அடுத்த 100 மீட்டரில் தெரிந்த விளக்கின் ஒளியும் ஆட்கள் நடமாட்டமும் உதவிமையம் என்பதை உணர்த்தியதும் புதுதெம்பு வந்தது. அதுவும் தார்சாலை.. அடுத்த 3 கி.மீ யில் இருக்கும் செக் பாயிண்ட் சென்று திரும்பி இதே தார்சாலையில் வரவேண்டும் என்பது சிறிய நம்பிக்கையை தந்தது. உதவிமையத்தில் தண்ணீர், வாழைப்பழம், உப்பு கலந்த எலுமிச்சை சாறு என எடுத்துக்கொண்டு "ஓட" ஆரம்பித்தோம். சீரான ஓட்டம்.. 2 கி.மீ கடந்ததும் மீண்டும் சுணக்கம். நடந்து, தவழ்ந்து செக் பாயிண்ட் சென்று மீண்டும் 66 கி.மீ உதவிமையம் வரும்போது இருந்த மனநிலை அத்தனை முயற்சிகளையும் சிதைத்து விடும்போல தெரிந்தது. ஏனெனில் உடல்வலி, பசி, போதிய சக்தி இல்லாதது என அத்தனையும் சேர்ந்தது. மேலும் அடுத்து வரும் 14 கி.மீ பாதை முழுக்க முழுக்க காபி தோட்டத்தின் சரிவான பகுதிகளில். உள்ளே நுழைந்தால் மீண்டு(ம்) வர முடியுமா என்ற சந்தேகம் ஒருபுறம். நான் ஓட்டத்தை நிறுத்தினால் என்னோடு இத்தனை தூரம் நம்பிக்கையோடு கடந்த சக்தியின் நிலை ஒருபுறம் என மனம் ஊசலாட.. உள்ளத்தனையதுதானே உடல் என்பதால் எதுவாகினும் சமாளிக்க மனதை திடமாக்கி உடம்பை சமாதானப்படுத்தி உள்ளே நுழைந்தோம். அடுத்த 3 வது கி.மீ ஆப்பு.. அணைந்து போன எனது டார்ச் வடிவில் வந்தது. சில கி.மீட்டர்கள் சக்தியின் விளக்கு வெளிச்சத்தில் சிரமப்பட்டு பயணிக்க திடீரென மழையின்போது முதுகு பையில் வைத்த மொபைல் ஞாபகம் வர அதன் டார்ச் வெளிச்சத்தில் பயணித்தேன்.








70 கி.மீ தூரம் கடந்தபோது 1:30 மணிநேரம் மீதமிருந்தது. அதாவது இன்னும் 10 கி.மீ ஓட(நடக்க) வேண்டும். அடுத்த ஆப்பு.. திடீரென உடம்பு படபடப்போடு நடுங்க ஆரம்பித்தது. அந்த கும்மிருட்டில் அப்படியே அமர்ந்து விட்டேன். 5 நிமிட யோசனைக்கு பிறகு உடம்பில் சர்க்கரை அளவு குறைந்ததை அறிந்து என்ன செய்வது என யோசிக்கையில் ஏற்கனவே தின்று மீதமிருந்த கடலை மிட்டாய் இரண்டை முன் பையில் வைத்த ஞாபகம்.. தேடி எடுத்து ஒன்றை சக்தியிடம் தர.. "வேண்டாம்.. ப்ரோ.. நீங்களே சாப்பிடுங்க.. எப்படியாவது முடிக்கலாம்" என்ற சக்தியிடம் கண்டிப்பாக "முடிக்கிறோம் " என வாய் மட்டும்தான் பேசியது..
கொஞ்சம் தெம்பு ஏறியதும் எங்களுக்கு முன்னால் 110 கி.மீ ஓடிக்கொண்டிருந்த சிலரோடு இணைந்து கொண்டோம். காரணம் இரவு வேளையில் ஏதாவது நிகழ்ந்தால் என்னாவது? என்ற பயம்.
அடுத்த ஆப்பு.. நான்கு முறைக்கு மேல் வழி மாறி சென்றோம். மரங்களில் போட்டிருந்த அம்பு குறிகள் சில ஏற்படுத்திய குழப்பங்கள் மற்றும் நீண்ட தூரம் கடந்தும் மரங்களில் எந்த குறியீடும் இல்லாமல் இருந்ததும் காரணம். பாதையே இல்லாத பாதைகளில் நடந்து, தவழ்ந்து, விழுந்து, உருண்டு மற்றும் ஓடி என 78 கி.மீ கடந்தபோது இரவு மணி 09:45 கடந்தது. 'சாரி.. சக்தி ... நேரம் முடிந்தது..' என நான் சொல்ல "பரவாயில்லை ப்ரோ.. எப்படியும் நேரம் முடிஞ்சு போச்சு.. கொஞ்சம் மெதுவாகவே போகலாம்" என்ற சக்தியின் வார்த்தைகளில் இருந்த வருத்தம் புரியாமல் இல்லை. கடைசி 1 கி.மீ தொலைவில் ஒருவர் குழப்பத்தோடு நின்றுகொண்டு எந்த வழி செல்வது என கேட்டு விழித்துக்கொண்டிருந்தார். இதே வழியில் நேராக என கூறி 300 மீட்டர் கடந்ததும் கால்களில் தார் சாலையும்.. கண்களில் பல பெரிய விளக்குகளின் ஒளியும் பட்டது. எங்கிருந்து கிடைத்த தெம்பு என யோசிக்க நேரமில்லை.. உடம்பு முழுக்க சிலிர்ப்பு. அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி முடிந்தவரை ஓடி நேரத்தை குறைப்போம் என.. "சக்தி.. ரெடி ஸ்டார்ட்.. என்று கத்தியவாறே ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இப்போதும் கண்ணில் கண்ணீர்..











எல்லைக்கோட்டை நெருங்கும் போது பின்னால் வந்தகொண்டிருந்த சக்தியை வேகமாக அழைத்து இருவரும் ஒரு சேர கை கோர்த்தவாறு எல்லையை தொட்ட அந்த ஒரு கணம்.. மரித்தாலும் மறக்காது..

80 கி.மீட்டர்.. எனது அதிகபட்ச ஓட்ட தூரம்.. காலை 6:45 க்கு தொடங்கிய ஓட்டம் சரியாக இரவு 10:05 க்கு நிறைவு செய்தோம். 20 நிமிடங்கள் அதிகமாக போனதால் பதக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தூரத்தை கடந்தோமே என்று மனதை சாந்தப்படுத்தி மேடை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து "மதியம் சாப்பிட்ட நேரத்தை குறைத்து அரைமணி முன்னால் கிளம்பியிருந்தால் பதக்க வாய்ப்பு இருந்திருக்குமே.." என யோசித்தபோது "சார்.. வாங்க.. மெடல் வாங்கிக்கோங்க.." என்ற குரல்.. 'அடடா.. இவ்வளவு கடின உழைப்பு வீணானதோ?' என்ற எண்ணத்தை உடைத்தது.
"இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலா? " என்று கேட்டு யாரோ என்னை வாஞ்சையுடன் தடவுவது போலிருந்தது.. 80 கி.மீ நிறைவு செய்த மனதோடு திருப்தியடைந்து இருந்தவனை மேடைக்கு அழைத்து பதக்கமும் தந்தபோது.. இந்த மால்நாடு ஓட்டத்திற்கான அத்தனை உழைப்பு, நேரம், பயிற்சி, காலை முதல் இரவு வரைக்கும் கொண்ட வலி, காயம் மற்றும் கனவுகள் என அத்தனைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பதக்கத்தை பெற்றபோது அளவில்லாத ஆனந்தத்தில் திளைத்துப்போனேன்.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இந்த கடினமான பாதை மற்றும் நேர சூழலை கருத்தில்கொண்டு நேரத்தை நீட்டியிருப்பார்கள் (நீட்டியிருக்கலாம்) போல. அதுவும் 110 கி.மீ ஓடிய பலரும் 80 கி.மீட்டரில் தாங்களாகவே ஓட்டத்தை முடித்துக்கொண்டனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்களே அந்த இக்கட்டான சூழலில் இரண்டாவது சுற்று 30 கி.மீ ஓடி 110 கி.மீ நிறைவு செய்ய சென்றவர்களை தடுத்தனர். காரணம் மிக கடினமான ஓடுபாதை, நள்ளிரவு வேளையில் உதவி மையங்கள் இல்லாமை, விபத்து நேரும்போது உடனடி மருத்துவ வசதிக்கு இயலாத நிலை, தொலைதொடர்பு இல்லாத அடர் வனம், விலங்குகள், பாம்புகள், இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என நிறைய காரணங்கள்..
அதையும் மீறி தாங்களாகவே பொறுப்பெடுத்துக்கொண்டு மீண்டும் 30 கி.மீ ஓடி 110 கி.மீட்டரை விடாப்பிடியாக நிறைவு செய்த நண்பர்கள் டெக்கா சதீஷ், பிரதீப், பிரதாப், சிபின் உள்ளிட்ட அசால்ட் ஆறுமுக தெய்வங்கள் சிலர் இருந்தனர்.

10:30 மணிக்கு இரவு உணவு உண்டு கிளம்பி பிரத்தியேக ஏற்பாட்டில் இருந்த பேருந்தில் கிளம்பி தங்கும் அறையை அடைந்தபோது மணி நடுநிசி 12:10. குளித்து முடித்து படுக்கையில் விழும்போது 1:30.. காலையில் 6:30 எழுந்து தயாராகி காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அறை திரும்பும்போது மீண்டும் அருவிக்கு போகலாம் என்ற ரமேஷின் ஆர்வத்துக்கு அணை போடாமல் ரெகவரி வாக் என்ற பெயரில் கால்நடையாக தொடர்ந்தோம். 3 கி.மீ நடந்து வேகமாக இருந்த அருவியில் உடம்பு வலித்த இடங்களில் எல்லாம் குளிர்ந்த தண்ணீரில் அடி வாங்கி மீண்டும் 3 கி.மீ நடந்து அறை திரும்பி ஊருக்கு கிளம்ப ஆயுத்தமானோம்.
மதிய உணவை அங்கேயே முடித்துவிட்டு தங்கும் விடுதியினர் ஏற்பாடு செய்திருந்த பிரத்தியேக பேருந்தில் பிரூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது நேரம் மதியம் 2:40. மாலை 5:50 மணிக்கு ரயில் என்பதால் அங்கேயே ஓய்வு அறையில் ஓய்வெடுத்து 6:20 க்கு வந்த ரயிலில் ஏறி பெங்களூர் கிளம்பினோம். ரயிலில் நேரத்தை கடத்த சூர்யா சாரின் யோசனையில் விளையாடிய கலகலப்பான விளையாட்டுகள் நேரத்தை மட்டுமின்றி உடல் வலிகளையும் கடத்தியது. பெங்களூரில் இரவு 10:10 க்கு கோவை எக்ஸ்பிரஸ்.. இடையில் சிக்னல் கிடைக்காமல் ரயில் தாமதப்படுத்த மீண்டும் பரபரப்பு தொற்றியது. அவசரமாக ஓடிப்போய் ரயில் ஏற முடியாத நிலை. உடம்பு முழுக்க அவ்வளவு வலி.. நல்லவேளையாக 10.15 க்கு பெங்களூர் KSR ரயில்நிலையம் அடைந்து மின்சார படியேறி 9 வது நடைமேடை அடைந்து அப்போதுதான் வந்துசேர்ந்த ரயிலில் ஏறி அமர்ந்ததும்தான்... உஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா என்று பழைய நிலைக்கு திரும்பினோம்.

இரவு உணவை ரயிலிலேயே முடித்துவிட்டு நான் இடையே சேலத்தில் இறங்க அலாரம் வைத்து தூங்கியது மட்டுமே நினைவில். மீண்டும் ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது அடித்த அலாரத்தால் எழுந்து தயாராகி சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ் பிடித்து வாழப்பாடி வந்து வீடு சேரும்போது மணி அதிகாலை 5:10.
மிகுந்த மனநிறைவோடு உறங்கிய முக்கியமான நாட்களில் இதுவும் ஒன்று.
எனது ஒட்டுமொத்த ஓட்ட பயணத்திலாகட்டும், உடன் பயணிப்பதிலாகட்டும் உள்ளத்தனைய உடல் குழுமத்திற்கும், நண்பர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன், அருணன், சக்தி, ரமேஷ்குமார் மற்றும் சூர்யா சார் ஆகிய அனைவருக்கும் ஒற்றைச்சொல் நன்றி போதாதுதான். அனைவருக்கும் பேரன்பும் நன்றிகளும்.. முக்கியமாக 15 மணிநேரமும் நேர்மறையான எண்ணத்தோடு ஓட்டத்தில் உடன் பயணித்த சக்திக்கும், அனைத்தையும் ஒருங்கிணைத்த இளவல் அருணன் மற்றும் அவ்வப்போது கலாய்த்து படார் சிரிப்பு வெடிகள் போடும் ரமேஷுக்கும்..

"மூளைக்கட்டிகாரனான நானும் எனது மாரத்தானும்..." - பாலமுரளி, வாழப்பாடி.

அனைவருக்கும் வணக்கம்... நான் பாலமுரளி.. வயது 50.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாய் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் எனது...