மும்பைக்கு (இயந்திரப்பறவையில்) முதல் பயணம்...🛫🛫🛫
மிக நீஈஈஈண்ண்ட பதிவு தான்...
பொறுமையாக படிக்கலாம்...😍
Tata Mumbai Marathon 2019
ஆசியாவின் மிகப்பெரிய மாரத்தான் மற்றும் உலக அளவில் சிறந்த மாரத்தான்களில் ஒன்றாக உலக மாரத்தான் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மாரத்தான் போட்டி நமது மும்பையில்..
இந்தியாவில் இருக்கும் தொலைதூர ஓட்டத்தை விரும்பும் ஓட்டக்காரர்கள் குறைந்தபட்சம் நான்கு மாரத்தான் நிகழ்வுகளில் பங்கெடுக்க ஆசைப்படுவர்..
1. மும்பை மாரத்தான்
2. சென்னை மாரத்தான்
3. ஹைதராபாத் மாரத்தான்
4 கொச்சின் மாரத்தான்
என்னளவில் ஏற்கனவே முதலாவது தவிர இதர மூன்றையும் முடித்திருந்தேன். ஆக எனக்கும் அந்த ஆசை இருந்தது.
பதிவு ஆரம்பித்ததும் முதலிலேயே பதிவு செய்துவிடுங்கள் என்றனர் நண்பர்கள். ஏனெனில் பதிவு செய்தபின் பதிவுகளில் உள்ள தகுதி விவரங்களை ஆராய்ந்து பார்த்து சரியாக இருந்தால்மட்டுமே தகுதி பெற்றதாக ஒரு மின்னஞ்சல் அனுப்புவார்கள். இந்த மின்னஞ்சல் வந்தால் மட்டுமே ஓட இயலும் என்பதால்.
பதிவுத்தொகை கொஞ்சம் அதிகம் என்றாலும் பதிவுசெய்து தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனைப்போல காத்திருந்தேன். ராஜ் மற்றும் தமிழ் இருவருக்கும் ஏற்கனவே மின்னஞ்சல் வந்திருந்ததால் இந்த பதட்டம்.
15 நாட்களுக்கு பின்னர் வந்த மின்னஞ்சல் என்னை தகுதியுள்ளவனாக காட்டியதும் அகமகிழ்ந்து நட்புகளிடம் சொல்ல அடுத்த ஏற்பாடுகளுக்கு ஆயுத்தமானோம்.
போக்குவரத்து, தங்குமிடம்...
இரயிலில் செல்வதுதான் சரி என நான் சொல்ல "வேண்டாம்.. 36 மணி நேர பயணம்... ஏறக்குறைய இரண்டு நாள் ஆகும்.. எனவே விமானத்தில் செல்லலாம்.." என ராஜ் சொல்ல.. உடனடியாக எனக்கு அதிர்ச்சியும், அடிவயிற்றில் ஒரு சுரப்பியும் தோன்றின.. இத்தனை வருஷமா அன்னார்ந்து பாத்து மேலே போற விமானத்துக்கு "டாட்டா" காட்டியதோடு சரி.. விமானப்பயணத்திற்கான வாய்ப்பும், அவசியமும் இதுவரை வாய்த்ததில்லை. இந்த " டாட்டா" மும்பை மாரத்தானுக்கு விமானமா? 1994 ல் உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என டெல்லி வரை வடமாநிலங்களுக்கு இரயிலில் பயணித்தது அதிகபட்ச தூரம். தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களுக்கு அவ்வப்போது பயணித்தாலும் மும்பைக்கு இதுதான் முதல் பயணம்.. அதுவும் விமானத்தில்..
மாரத்தான் ஓடும்போது வரும் பதட்டம் போய் இந்த விமானப்பயண பதட்டம் தொற்றியது. ' சலுகை விலையில் டிக்கெட் போட்டாச்சு. நாம விமானத்தில்தான் போறோம்..' என ராஜ் சொல்ல தமிழ் ஏற்கனவே பதிவு செய்த விமானத்திலேயே நாங்களும்..
இடையில் ஏற்பட்ட சிலபல குழப்பங்களால் ராஜ் வர இயலாது எனக்கூறி அவரின் டிக்கெட்டை கேன்சல் செய்ய.. பதட்டம் அதிகமானது. தமிழ் இருக்க கவலை ஏன்? என திடமான வேளையில் சென்னை மாரத்தான் ஓடும்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் காயத்தால் தமிழும் வர இயலாத சூழல். ராஜ், தமிழ் இருவரும் கடந்த ஆண்டு மும்பை சென்ற அனுபவம் இருந்ததால்தான் நான் தைரியமாக இருந்தேன். இப்போது எல்லாம் முடிந்தது. இருந்தும் நம்நாடு.. நம்மக்கள்..! என்ற தைரியத்தில் துணிந்தேன். எனது நல்லநேரம் கடைசி நேரத்தில் ராஜ் வருவதாக கூறியபோது மகிழ்ந்த நான் வேறு விமானம் என்றதும் புஸ்ஸாகிப்போனது. சரி.. என்னதான் நடக்கும் பார்க்கலாம்.. என கிளம்பி சென்னையில் தழிழ் வீட்டிற்கு சென்றேன். ஒரு வழியாக பேசியதில் தழிழும் உடன்வர சம்மதிக்க... முடிந்தால் ஓடலாம்... இயலாவிடில் அறையில் ஓய்வெடுக்கலாம் என்று கூறி உண்டு உறங்கினோம்.
சனிக்கிழமை அதிகாலை 5:30 மணி விமானத்துக்கு 4:00 மணிக்கு விமானநிலையம் செல்ல 3:00 மணிக்கு தயாராகி கிளம்பி Uber காரில் இடமடைந்தோம். ராஜ் செல்லவிருந்த விமானம் எங்களுக்கு 1 மணிநேரம் முன்னால்..
ஏற்கனவே நட்புகளை வழியனுப்ப விமானநிலையம் வந்திருந்தாலும் நான் ஒரு பயணியாக புதியவன் என்பதால் உள்ளே அனைத்து நடைமுறைகளையும் தமிழ் துணையுடன் முடித்து விமானத்திற்கு செல்லும்போது அதிகாலை 5:40 மணி.
தமிழுக்கும் எனக்கும் வெவ்வேறு இருக்கைகள். உள்ளே போகும்போது ஒரு அல்பமான ஆசை..."ஜன்னலோர சீட்டா இருந்தா வேடிக்கை பாத்துட்டே போலாமே? ". நினைத்ததுதான் நடந்தது. ஜன்னலோர சீட்தான்.. கொஞ்சம் குஷியானாலும் அந்த இருட்டில் வெறும் லைட் வெளிச்சம்தான் பார்க்க முடியும்.
சீட்பெல்ட் போட வலியுருத்தும்போதுதான் லேசான சிலிர்ப்பு வந்தது. சரியாக 6:00 மணிக்கு விமானம் மேலெழும்ப .. அட.. இவ்வளவுதானா? என நானே சிரித்துக்கொண்டேன். சிறிது நேரம் " வேட்கையோடு விளையாடி".. சூரியன் தலைகாட்ட துவங்கியதும் சூரியனையும், மேகக்கூட்டத்தையும் ரசித்தபடியே சென்றபோது கீழே ஆறு போன்ற ஏதோ ஒன்று தென்பட.. விமானம் தரையிரங்க ஆரம்பித்தது. அதற்குள்ளாகவா? காலை 7:35 மணிக்கு தரையிரங்கி மும்பை விமானநிலையம் விட்டு 8:00 மணிக்கு வெளியே வந்தோம். முன்னரே வந்து காத்திருந்த ராஜ்ஜையும் அழைத்துக்கொண்டு
எஃக்ஸ்போ செல்லும்வழியில் காலை உணவருந்தி 10:00 மணிக்கு எஃக்ஸ்போ சென்றபோது ஆச்சரியம்.. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்... துளியும் தவறு நடக்காமல் அனைவரது உடைமைகளையும் சோதித்து உள்ளே அனுமதித்தனர். பிப் (ஓட்ட எண்) வழங்கும்போது புகைப்படம் சரிபார்த்து வழங்கினர். அடுத்து பதிவு செய்த ஹோட்டல் அறைக்கு செல்ல வெளியேவந்தபோது பெரிய கூட்டத்திற்கு நடுவே "மேரிகோம்" (6 முறை பெண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்) உள்ளே சென்றார்.
பிப் வாங்க நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
இரண்டு பேர் தங்கும் அறையில் நாகர்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நண்பர் சிபினும் சேர்த்து நான்குபேர்.. கடைசி நேரத்தில் ஹோட்டலை மாற்றி ஒருவழியாக இரண்டு அறையெடுத்து தங்கினோம். மதிய உணவிற்காக தமிழின் தாயார் தயாரித்து தந்த எலுமிச்சை சாதம் மூவருக்கும். பிறகு காலாற நடந்து நாளைய தேவைக்கான பொருட்கள் வாங்கி அறை திரும்பினோம். நிறைய நேரம் இருந்ததால் நன்கு உறங்கி ஓய்வெடுத்தோம். இரவு உணவை முடித்து 8 மணிக்கு உறங்க ஆரம்பித்தோம்... நண்பர் சிபினும் இரவு 11:00 மணிக்கு வந்து சேர்ந்தார்.
புதிய இடம் என்பதாலோ அல்லது நாளைய ஓட்டத்தை நினைத்தோ தெரியவில்லை..உறக்கம் வரவில்லை. ஆனாலும் உறங்கி அதிகாலை 3:00 மணிக்கு தயாராகி 4:10க்கு ஓட்டம் தொடங்கும் இடத்தை அடைந்தோம். தன்னம்பிக்கையின் திருவுருவம் தமிழ்ச்செல்வன்.. சென்னை மாரத்தானில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாததால் ஒரு சுற்றுலாவாகவாவது இருக்கட்டும்.. என உடன் வந்தவர் திடீரென ஓட்ட உடுப்புகளை மாற்றி ஓட தயாரானார். "முடிந்தவரை ஓடுகிறேன்.. எப்படியாவது மெதுவாக முடிக்க முயல்வேன். முடியவில்லை என்றால் இடையில் ஓட்டத்தை முடித்துக்கொள்கிறேன்.." என்றபோது அந்த போராட்ட குணம் கண்டு சிலிர்த்தேன்.
சமீபகாலமாக ராஜ் எடுத்துக்கொண்டிருந்த பயிற்சியும் முயற்சியும் கண்டு வியந்து, எப்படியும் ஏதாவது ஒரு தனிப்பட்ட சாதனைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தேன். ராஜ்-ம் தயாராக களத்தில்.. இடையில் கோவை நண்பர் சசியும் இணைந்தார்.
இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாரத்தான் ஓட்ட நிகழ்வுகள் எங்கும் பார்த்ததில்லை. அவ்வளவு பேரையும் ஒவ்வொருவராக சோதனை நடத்தி அடையாளத்தை சரிபார்த்தே உள்ளே அனுமதிக்கின்றனர். முழுமாரத்தான் ஓடுபவர்கள் மட்டும் ஏறக்குறைய 6900 பேர். மிரண்டு போனேன்..இத்தனை பேரா ? என..
டாக்ஸி விட்டு இறங்கி வரும்போதே உடல் சூடேற்ற ஒரு கிலோமீட்டர் ஓடியதால் மிதமான ஸ்ட்ரெட்ச்சஸ் செய்து காத்திருந்தேன். ஒன்றாக சென்ற இந்த ஐந்து ஆடுகளும் தனியே பிரிந்தன.
சரியாக 5:30 மணிக்கு "மேரிகோம்" கொடியசைக்க ஓட்டம் துவங்கியது. தொடக்கப்புள்ளியை தொடவே 3 நிமிடங்கள் ஆனது. முதல் ஒரு கிலோமீட்டர் கூட்டத்தின் ஊடே புகுந்து ஓடி வேகமெடுத்த பிறகு சாதாரணமாக ஓட முடிந்தது. சாலைகள் அவ்வளவு நேர்த்தி. அப்படியே படுத்துக்கொள்ளலாம். ஓரிடத்தில் கூட சிரமமில்லை. பளபளக்கும் அந்த சாலைகள் நம்மூரில் மிகமிக அரிது.
முதல் பத்து கிலோமீட்டர் வழக்கமான நேரத்தில் முடித்தேன். அப்பப்பா... அந்த அதிகாலை நேரத்திலும் எங்களை உற்சாகப்படுத்த எத்தனை எத்தனை மக்கள்.. உடன் ஓடி வந்து தண்ணீர் வழங்கிய தன்னார்வலர்கள்.. காலை நடைப்பயிற்சி முடித்து எங்கள் கையோடு சேர்த்து தட்ட ஒரு கை நீட்டியபடி காத்திருந்த முதியவர்கள்... உற்சாக கூக்குரல்கள் என ஒரே ஆரவாரம்..
அனுபவித்து ரசித்தபடியே ஓடிக்கொண்டிருந்தேன். 19வது கி.மீட்டரில் தான் அந்த பிரம்மாண்டம் தொடங்கியது. ஆம்.. மும்பையின் 2.5 கி.மீட்டர் நீளமுள்ள கடல் பாலம்.. கடலுக்கு மேலே ஓடிக்கொண்டே சிலபல செல்பியோடு பாலத்தை கடந்து மீண்டும் ஊருக்குள்... இருள் வடிந்து சூரியக்கதிர்கள் ஊடுருவும் நேரம்...
21 கிலோமீட்டர்கள், 32 கிலோமீட்டர்கள் வழக்கமான வேகத்தில் கடந்தேன். போட்டி தொடங்கும் முன் மனதளவில் ஒரு முடிவோடு இருந்தேன்.. ஒன்று எனது முந்தைய நேரமான 4:13 ல் மூன்று நிமிடங்களையாவது குறைப்பது... முடியாது என்ற சிலரின் பதிலால் 4:30 மணிக்குள் கட்டாயம் முடிப்பது, எங்கும் நடப்பதோ நிற்பதோ கூடாது என..
மாரத்தானின் உண்மையான போராட்டம் 33 வது கிலோமீட்டரில் இருந்துதான் ஆரம்பிக்கும்.. இங்கும் அப்படியே..
உடம்பில் உள்ள அனைத்து சக்திகளும் வடிந்து போயிருக்கும். கால்கள் கெஞ்சும். பசி தலைகாட்டும்.. இங்கு வெய்யிலும் சேர்ந்து தலைகாட்ட... இந்த அளவு வெய்யிலில் ஓடிய அனுபவம் இதுவரை இல்லை..
கெஞ்சிய கால்களுக்கு தெம்பாக "ஓர்சால்" பானமும், வாழைப்பழம் மற்றும் உடன் வைத்திருந்த கடலை பர்பியும் கொடுத்து கொஞ்சம் சக்தியை ஊட்டினேன்.
ஆனாலும் கால்கள் ஓட மறுக்க 200 மீட்டர் நடந்த பின் பின்னால் ஓடிவந்த வடநாட்டு நண்பரின் "கமான்... கமான்... ரன்..ரன்.." என்ற வார்த்தைகளோடு தோள் தட்டிய அவருக்காகவாவது ஓடு என இட்ட கட்டளையை ஏற்ற கால்கள் அடுத்த இரண்டு கிலோமீட்டர் கடந்தன.
இந்த இடங்களில் இத்தனை சிரமம் இருக்கும் என்பதை உள்ளூர் மக்களும் அறிந்ததாலோ என்னவோ... 30 கிலோமீட்டர் தாண்டியதும் வழி நெடுக இருபுறமும் மக்கள் வெள்ளம்.. தமது கைகளில் சாக்லேட், ஆரஞ்சு, உப்பு, முழு வாழைப்பழம், எனர்சால் பானம், தண்ணீர் என அத்தனையும் கண்டு அசந்துபோனேன்.
அதுவும் குழந்தைகள் தங்கள் கைகளில் அவற்றை ஏந்தியபடி வந்து "ஆல் த பெஸ்ட்.." என கூறி தரும்போது கண்களில் நீர் திரண்டது.
யார் இவர்கள்? நமக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஓட்டக்காரர்கள் மீது இவர்களுக்கென்ன அக்கறை? அன்பு.. அன்பைத்தவிர வேறில்லை.
அவர்களைப்பார்த்து புன்னகைத்தபடியே ஓடத்தொடங்கிய கால்களும் உற்சாகம் கொண்டன.
மேலும் 'ஐஸ் பாத்' என்ற சூடேறிப்போன உடம்பை குளிர வைக்க ஐஸ் தண்ணீரை பஞ்சால் நனைத்த ஒத்தடம்..
ஓடும் பாதையில் 'நேச்சர் வ்வேலி' என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட "சாரல் குடில்" இரண்டு இடங்களில்..
அட.. அட.. அந்த நேரத்தில் என்ன ஒரு சிலிர்ப்பான சுகம்.. எத்தனை கொடுத்தாலும் தகும்...
பாரம்பரிய உடைகளோடு நடனமாடி வரவேற்ற ஜப்பான் குழுவினர்..
பேண்டு வாத்தியங்கள்..
உற்சாக கூக்குரலோடு விதவிதமான வாசகங்கள் கொண்ட பதாகைகள் காட்டியவாறு நின்ற ஆர்வலர்கள்... என வழிநெடுக உற்சாகம் பொங்கியது.
38 வது கிலோமீட்டரில் நேரத்தை கவனித்தேன். 4:30 மணிக்குள் முடிக்க வேண்டுமானால் செல்லும் வேகம் போதாது என உணர்ந்து வேகம் கூட்டி உடல் தளர்ந்துபோன அந்த நிலையிலும் கடைசி 3.5 கிலோமீட்டரை எப்படி கடந்தேன் என என்னாலேயே நம்ப முடியவில்லை. இது ராஜ்குமாரின் அறிவுரை.. "கடைசி 2, 3 கிலோமீட்டர் எதையும் கவனிக்காமல் முடிந்த வேகத்தில் ஓடுங்கள்" என்பது. செயல்படுத்தி வெற்றியும் கண்டேன்... இந்த நேரத்தில் குறைந்தது 150 பேரையாவது பின்னுக்குதள்ளி கடந்திருப்பேன். அந்த வேகத்திற்கு இன்னொரு காரணம்... 38 வது கிலோமீட்டரில் 100 மீட்டர் தூரமுள்ள உதவி மையத்தை அடைய நடந்து செல்லும்போது மொபைலில் மும்பை மாரத்தானுக்கான பிரத்தியேக செயலியை திறந்து ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த நண்பர்களின் ஓட்டத்தை நேரலையில் கண்காணிக்கும் வசதி இருந்ததால் ராஜ்குமாரை தேடினேன். அந்த ராக்கெட் 3:42:52 க்கே இடத்தை அடைந்திருந்தது கண்டு பேரானந்தமும், ஆச்சரியமும் சிறிது அதிர்ச்சியும் கொண்டேன். ராஜ்குமார் 4:00 மணிக்குள் முடிக்கவேண்டும் என அவர் வைத்திருந்த இலக்கை 3:42ல் முடித்து தனிப்பட்ட மிகச்சிறந்த நேரமாக பதிவு செய்தது கடந்த நான்கு மாத கடுமையான பயிற்சியையும், உழைப்பையும் பறைசாற்றியது. அடுத்து உடலளவில் காயமிருந்தும் மனவலிமையோடு ஓட முனைந்து இரண்டாவது கி.மீட்டரில் ஓட்டத்தை கைவிட்ட தமிழ்ச்செல்வனை நினைத்து ஒரு கணம் வருந்தினாலும் பின் சரியான முடிவுதான் என சமாதானமானேன். ஆசியாவின் மிகப்பெரிய மாரத்தான் மற்றும் எனது இரண்டாவது முழு மாரத்தானை 04:26:16 மணிக்குள் 42.195 கி.மீ (43 கி.மீ) கடந்து எல்லைக்கோட்டை தொட்டபோது அடைந்த பரவசத்திற்கு அளவில்லை.
எல்லைக்கோட்டில் உற்சாக வரவேற்புடன் வழங்கப்பட்ட அழகான டவல், வேறெங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த இரட்டை மெடல், சிற்றுண்டி இல்லாது போனாலும் அதற்கு இணையாக வாழைப்பழம், சாத்துக்குடி, அழகாக பேக்கிங் செய்த குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய தட்டுவடை என துணிப்பையில் தந்தது அருமை.
உள்ளே சென்று எனக்காக காத்திருந்த ராஜ்குமாரை கண்டு வாழ்த்தியதும் அடுத்ததென்ன..? பெருமை கொள்ளும் தருணம்... மாற்றி மாற்றி புகைப்படம் எடுத்து அறை திரும்பினோம்.
அறைக்கான நேரம் நெருங்கியதால் அறையை காலி செய்து ஹோட்டலில் மதிய உணவருந்தி விமானநிலையம் வந்து சேர்ந்தோம். மூவருக்கும் மூன்று நேரங்களில் தனித்தனி விமானம்..
முதலில் ராஜ், இரண்டாவதாக நான் பிறகு தமிழ் என கிளம்பினோம். வரும்போது தமிழ்ச்செல்வன் மூலம் கிடைத்த அனுபவத்தால் பழகிப்போயிருந்தேன். இங்குதான் அடுத்த ஓட்டம் ஆரம்பமானது... இரவு 9:30 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம் 10:20 க்கு வந்துசேர... நான் ஏற்கனவே 11:00 மணிக்கு சேலம் ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். பரபரப்போடு வெளியேவந்து ஓலா, ஊபர் என எதுவும் ஒத்துவராமல் போக தமிழ் தந்த யோசனைப்படி விமானநிலையம் முன்னே இருந்த திரிசூலம் இரயில்நிலையத்தை ஓட்டமும் நடையுமாய் அடைந்து தாம்பரம் செல்ல காத்திருந்தேன். மின்சார இரயில் வந்த நேரம் 10:38.. இரவு சாப்பாடு இல்லை என்றானது. கூடவே பதற்றமும் தொற்றிக்கொள்ள தாம்பரம் சென்றபோது மணி 11:14 ..
இரயில் எஃக்மோர் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி சற்றுநேரத்தில் தாம்பரம் வரப்போவதாக வந்த அறிவிப்பை கேட்டதும்தான் ஆசுவாசமடைந்தேன்.
பசிக்கு மில்கா ஒன்டர்கேக்..
ஒரு தண்ணீர் பாட்டில்..
இரயிலேறி இடம்பார்த்து அமர்ந்து சில துண்டு கேக் சாப்பிட்டு அதிகாலை 3:55 க்கு அலாரம் வைத்து படுத்ததுதான் தெரியும்..
இயிலோடு சேர்ந்து கனவில் நானும் ஓட ஆரம்பித்தேன்.
அலாரம் அடித்து, எழுந்து தயாராகி, வாழப்பாடியில் இறங்கி வீடு வந்தபோது அதிகாலை 4:45 மணி..
எந்த சூழலிலும் அடுத்த ஆண்டு தவறாமல் குடும்பத்தோடு திட்டமிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக வரவேண்டும்... மீண்டும் இதே சாலையில், இன்னும் அதிக பயிற்சியோடும், உழைப்போடும், இன்னும் விரைவில் முடிக்கும் முயற்சியோடும் ஓடவேண்டும்...
இதே மக்களை இதே அன்போடு மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற "வேட்கையோடு" உறங்கிப்போனேன்.
மாரத்தான் விரும்பிகள் ஒரு முறையேனும் மும்பை மாரத்தானில் ஓடிப்பாருங்கள்.. தரமான, உலகளாவிய, பிரம்மாண்டமான அனுபவங்கள் காத்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் டாட்டா மும்பை மாரத்தான் 2019 ... "பிரமிப்பின் உச்சம்...
































