Friday, March 29, 2019

வல்வில் ஓரி அல்ட்ரா மாரத்தான், கொல்லிமலை _ 52 கி.மீ...

VVOU 2019 _ 52 k
வல்வில் ஓரி அல்ட்ரா மாரத்தான், கொல்லிமலை _ 52 கி.மீ...
சென்ற ஆண்டு செப்டம்பரில் நடந்த இதே VVOU 18 ஓட்டத்தில் 52 கி.மீ பதிவு செய்து கலந்துகொள்ள தயாராக இருந்தபோது இரண்டு நாள் முன்பாக வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு போக முடியாமல் பெரும் அவதிக்குள்ளானேன். அந்த தடை எதற்காக என இந்தமுறை புரிந்துகொண்டேன்.
பதிவு ஆரம்பம் என மெயில் வந்ததும் எத்தனை கி.மீ என்பதில் தொடங்கி ஞாயிறு மாலை வீடு வந்து சேர்ந்தது வரை நடந்தவை அனைத்தும் ஏதோ மாயாஜாலத்தால் நடந்தது போன்ற உணர்வை தவிர்க்க இயலவில்லை...
U2 ல் இருந்து யார்.. யார் இந்த ஓட்டத்தில் பங்கேற்கிறார்கள்? என்றபோது EA ( Eswari), Boo ( Boobalan) மற்றும் நான் , காரோட்டியாக சாமி ( Ramanathan) என முடிவானது.
அடுத்தது தங்குமிடம்..
கடைசி நேரத்தில் அறை கிடைக்காது என்பதால் முன்னரே பதிவு செய்துவிடலாம் என நினைத்தபோது உடனடியாக நினைவில் வந்தவர் சகோதரி Dr Priya.. ஏற்கனவே கூறியிருந்தார்.. கொல்லிமலையில் தங்கும் ஏற்பாட்டில் சென்றமுறை ஒரு தவறு நடந்து சிரமப்பட்டதை கூறியபோது ...அடுத்தமுறை செல்லும்போது சொல்லுங்கள் என..! துபாயில் இருந்தவரிடம் சொன்னேன்.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அழைத்து இது எனது கஸின் செல் நம்பர்.. அவரிடம் பேசுங்கள் என்றார்.. 

Dr Rameshkumar அரசு மருத்துவத்துறையில் துணை இயக்குனராக நாமக்கல் மாவட்டத்தில் பதவி வகிப்பவர். நமது U2 குழுவின் உறுப்பினர்.. ஓட்டக்காரர்..
பேசியதும் தேதி , விபரம் கேட்டுக்கொண்டு மீண்டும் அழைப்பதாக சொல்லி அடுத்த பத்தாவது நிமிடம் அழைத்து "நீங்கள் தங்குவதற்கு ரூம் தயார்.. இங்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பு எனக்கு அழையுங்கள்" என்றார்.. நானும் விபரங்களை பிறகு கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து நன்றி கூறி.. போனை வைத்தேன்.

17 ம்தேதி நெருங்கியதும் Dr.ரமேஷை அழைத்து நினைவூட்டியதும் உடனே அவர் "கொல்லிமலை மருத்துவமனை ஓட்டுநர் திரு.ரஞ்சித் என்பவர் உங்களை அழைப்பார்.. அவரிடம் விபரங்களை சொல்லிவிட்டு கொல்லிமலை செல்லுங்கள்" என சொல்லி போனை வைத்து ஒரு நிமிடம் கூட ஆகவில்லை.. திரு.ரஞ்சித்தின் அழைப்பு.. அங்கு ஆரம்பித்தவர்தான் ஞாயிறு கொல்லிமலை சென்று நாங்கள் திரும்பும்வரை அவர் ஓயவில்லை. கிளம்பும்போது தகவல் சொல்கிறேன் என வைத்தேன்.

இடையில் ஓட்டத்தில் RG ( Rajaganapathy), RK ( Rajkumar) ஆகியோர் இணைந்து பின் தவிர்க்கமுடியாத நிலையில் RK வராமல் போனது, கடைசியில் வண்டியில் ஏறிய பிறகு இறங்கிய சாமி.. என ஏகப்பட்ட ட்விஸ்ட்... ஓடும் நால்வரில் மூன்று பேர் 26k.. நான் மட்டும் 52k..






சனிக்கிழமை காலை 7:45 க்கு சென்னையிலிருந்து பயணத்தை துவங்கிய EA, RG, Boo .. மூவரும் வாழப்பாடிக்கு மதியம் 1:00 மணிக்கு வர என்னோடு நால்வரும் கொல்லிமலை நோக்கி பயணித்தோம்...

வண்டியில் ஏறியது முதல் வயிற்று வலி.. சிரித்து சிரித்து.. அத்தனை அலப்பறை... முறை போட்டு ஒவ்வொருவராய் கலாய்த்து, பேசி ... ப்ப்பா...🤡😜😝😬😳😂🤣😅😍
மெட்டாலா, முள்ளுக்குறிச்சி வழி பயணம் என்பதால் மதிய உணவு முள்ளுக்குறிச்சியில்.. அருமையான வீட்டு சமையல் உணவு..

இங்கிருந்து திரு.ரஞ்சித்தை அழைத்து கிளம்பியதாக தெரிவித்தேன். 'நான் நீங்கள் வரும் நல்லதம்பி ரிசார்ட் வந்துவிடுவதாக' தெரிவித்தார்...மீண்டும் வயிற்றுவலியோடு பயணம்...

இடையில் பாதிவழியில் ஒரு பணியாரக்கடையில் பணியாரம் வித் டீயோடு போட்டோஸ்... மாலை 4:30 மணிக்கு கொல்லிமலை நல்லதம்பி ரிசார்ட்.. எங்களுக்கு முன்னரே அங்கு ரஞ்சித்.. அவரை அறிமுகப்படுத்திக்கொண்டு "பிப்" பெற்று 5:00 மணிக்கு துவங்குவதாகயிருந்த VVOU ஏற்பாட்டாளர்களின் அறிமுக உரைக்காக காத்திருந்தோம். இடையில் சேலம் ரன்னர்ஸ் குழுவிலிருந்து Dr.சிவராஜ், ரவி ஆகியோர் இணைந்தனர்.

அனைவரது அறிமுகத்தோடு கிளம்பும்போது ரஞ்சித்திடம் ஹோட்டல் எங்கே எனக்கேட்க.. ஹோட்டல் சில்வர்லைன்..! என்றார். நாங்களும் அங்கேதான் என Dr.சிவராஜ்-ம் சொல்ல அனைவரும் ஒன்றாக ரஞ்சித் முன்னே செல்ல நாங்கள் தொடர்ந்தோம்.

கொல்லிமலையில் பிரம்மாண்டமான, புதிய ஹோட்டல்... ஹோட்டலை பார்த்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அந்த பார்வையில் பல அர்த்தங்கள்...😉
ரஞ்சித்தே சென்று அறைகளுக்கான சாவியை வாங்கி வந்து கொடுத்ததோடு நில்லாமல்.. அவர் அடிக்கடி கேட்டதும், சொன்னதும்.."சார்.. வேறென்ன வேண்டும்?? ஏதாவது உதவின்னா கூப்பிடுங்க.. பக்கத்தில்தான் வீடு.."
அதற்குள்ளாக மூன்றுமுறை போன் Dr.ரமேஷிடம் இருந்து ரஞ்சித்துக்கு... என்னையும் அழைத்து "சார்.. எதுவானாலும் ரஞ்சித் கிட்ட தயங்காமல் கேளுங்க.." என்றபோது ..'எதற்கு உங்களுக்கு சிரமம்? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..' என்றதும் இல்லை.. இல்லை.. கூடாது என 'மிரட்டினார்.. அன்பால்'..

இரவு உணவுக்கு வெளியே செல்லலாம் என்றபோது 'என்ன வேண்டும்?' என்ற ரஞ்சித்திடம்... காரமில்லாமல் இட்லி, தோசை, தயிர் சாதம் இருக்கும் கடையாக சொல்லுங்கள் என்றதும் .. செம்மேடு பக்கம் வாங்க ... கடை இருக்கிறது என்று கிளம்பினார்.
செம்மேடு சென்றதும் எங்களுக்கு முன்னால் ஹோட்டலுக்கு வந்து இட்லியை விசாரித்து இல்லையென்றதும் தயார் செய்யவைத்து காத்திருந்தது எல்லாம் வேற லெவல்...
அங்கும் ரஞ்சித்தே மிரட்டினார் Dr.ரமேஷ் சார்பாக.. அன்பால்...
அதுவும் மறுநாள் மதிய உணவிற்கும் சேர்த்து...

காலை 4:00 ஓட்டத்திற்கு 2:55 க்கு ரவி எழுப்ப கிளம்பி Dr.சிவராஜ் காரில் மூவரும் கிளம்பினோம்.. எங்களோடு Dr.சரவணன்.. இவர் ஓடுவது 26k என்றாலும் சிறப்பு அனுமதியோடு 4:00 மணிக்கே துவங்கினார்... அதிகாலை 3:50 க்கு நல்லதம்பி ரிசார்ட்ஸ் வந்திருந்தோம்.
ஓட்டம் துவங்க சில நிமிடங்கள் முன்னர்தான் ஓட்டப்பாதையில் மாற்றம் செய்ததை தெரிவித்தார்கள்.. நல்லதம்பி ரிசார்ட்டில் இருந்து 11 k ஓடி பின்பு அதே வழியில் நல்லதம்பி ரிசார்ட் வந்து அங்கிருந்து எதிர்ப்புறம் 2k சென்று திரும்பினால் 26k.. இதை நாங்கள் இரண்டுமுறை கடக்க வேண்டும்..

சரியாக 4:08 க்கு ஓட்டம் ஆரம்பித்தது. இருட்டுப்பாதையில் அதிகாலை குளிரில் அருமையான ஓட்டம்.. முதல் 5 கி.மீ மூச்சுவிடக்கூட சிரமம்.. கையெல்லாம் மரத்துப்போக... நல்லவேளை கையில் லைட் கொண்டு செல்லும் அவசியம் இல்லாமல் போனது. முன்னரே ஹெட்லைட் வேண்டுமே என்ன செய்ய என யோசித்தபோது EA சொன்ன ஐடியா சரியாக பட்டது.. சைக்கிளிங் செல்ல சைக்கிளுக்கான டார்ச் இருந்தால் பயன்படுத்தலாம் என்றார். அதையே கொஞ்சம் "கிட்னி"யை யூஸ் பண்ணி பக்கத்து கடை டெய்லர் உதவியோடு தலைக்கு அணியும் வகையில் பெல்ட்டோடு தயார் செய்ய கைமேல் (தலைமேல்) பலன்...

சீரான ஓட்டம்.. உடன் ரவியோடு... எனக்கென தனியாக நேரம் எதையும் நிர்ணயித்துக்கொள்ளவில்லை. இயல்பாக கொஞ்சம் வேகம் குறைத்து ஓடினோம்.. அதிக சக்தியை வேகத்தில் செலவழித்தால் இரண்டாவது சுற்று வரும்போது நாக்கு தொங்கிப்போகும் என்பதால்... கிராமங்கள் வழியே மயில்களின் அகவலோடு இருட்டை (நட்சத்திரங்களை) ரசித்தபடியும் குரைத்தவாறு நெருங்கிவந்த நாய்களை குரைத்தபடியும் அழகான ஓட்டம். ஒவ்வொரு 4 கி.மீட்டரிலும் உதவி மையங்கள்... நின்று நிதானித்து உண்டு செல்லும் வகையில்...

முதல் சுற்றை (26 k) 2:55 மணியில் முடித்திருந்தேன். 7 மணிக்கே வெயில் வந்தாலும் சூடென்று ஒன்றுமேயில்லை. நல்லதம்பி ரிசார்ட் வந்ததும் வழியில் ஏற்பட்ட வயிற்றின் பிரட்டலை சரிசெய்து மீண்டும் ஓட்டம்.. இப்போது ஹெட்லைட் தேவைப்படவில்லை என்பதால் அங்கேயே ஒப்படைத்து சென்றேன்.

கூடுமானவரை நிற்கவோ நடக்கவோ கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதை 43 கி.மீ வரைதான் கடைபிடிக்க முடிந்தது..

உண்மையான ஓட்டம் இப்போதுதான் ஆரம்பமானது... அதற்குபிறகு சூரியனும் சுட, ஒருபுறம் பசி (சாப்பிட முடியாது என்பது வேறு..ஆனாலும்..), உடல் சோர்வு, தனிமை என அத்தனையும் ஒன்றாய்...
இன்னும் 9 கி.மீ தான் என மனது சொன்னாலும்.. அய்யய்யோ.. இன்னும் 9 கி.மீ-ஆ என உடலின் அங்கங்கள் தனித்தனியாக கதறின... வேறு வழியின்றி 10 அடி ஓடி 20 அடி நடக்க ஆரம்பித்தேன்.. நல்ல ஏற்றம்.. கொண்டைஊசி வளைவு ... அடுத்த 2 வது கி.மீ-ல் இருந்த உதவிமையத்தில் சிறிது நேரம் தேவையானதை முக்கியமாக பானகம்.. (அருமையான தயாரிப்பு) எடுத்துக்கொண்டு மீண்டும் நகர்ந்தேன்..

தொலைவில் சற்றே சரிவான பாதை தெரிந்ததும் ... இதைவிடக்கூடாது.. இதில் ஓட்டம் ஆரம்பித்தால்தான் ஓட முடியும் என மெதுவாக ஓட ஆரம்பித்தேன். உடல்மொழிக்கு காது கொடுத்தால் ஓட்டம் அம்போதான் என நினைத்துக்கொண்டு சீராக ஓடினேன்.
இடையில் நான் கொண்டுசென்ற "எலக்ட்ரால்"துணையாய் வர மெதுவாக 49 வது கி.மீ-ஐ தொட மேடான இடத்திலிருந்து குரல்.. வாசு சார்.. "பாலா.. வெல்டன்... குட் ரன்.. சூப்பர்... ஜஸ்ட் 4 k ஒன்லி.." என உசுப்பேத்த... நான் அதிர்ச்சியாக.."இன்னும் 4 k வா? சார்.. இன்னும் 3k தானே" என்றேன். அவரும் 'ஆம்' என்று ஆமோதிக்க...

அங்கிருந்து தொடங்கிய ஓட்டம்.. ராஜ் சொல்லித்தந்த பாடம்.. மிச்சமிருந்த முழு சக்தியையும் திரட்டி மேடான பகுதியில் ஓட ஆரம்பித்தேன்.. இந்த கடைசி 3 கி.மீ ஓட்டம் என்பது வாழ்க்கையில் எந்நாளும் மறக்கமுடியாதது. கெஞ்சிய உடலை பொருட்படுத்தாமல் "இதோ இலக்கை நெருங்கிவிட்டோம்.. இன்னும் கொஞ்ச தூரத்தை கடந்தால் நனவாகும்.. உனது கனவு " என்ற மனதின் உந்துதலோடு உடம்பிற்கு சொல்லிக்கொண்டே ஓட..


ஆம்.. 'ஓடும்'போது ரோட்டின் பக்கவாட்டில் இருந்து ஒரு குரல்.." மம்மி.. ஒன் அங்கிள் ஈஸ் கமிங்..." என சொன்னதும்தான் (வாசு சாரின் சுட்டிப்பையன்..) தெரிந்தது "நல்லதம்பி ரிசார்ட்" வாசல்..! கூடவே கைத்தட்டல் ஓசையும் கேட்டது...!

ஆம்.. முடித்துவிட்டேன்.. எனது 52 கி.மீ ஓட்டத்தை மிக நேர்த்தியாக, எந்த காயமின்றி, எனக்கான வேகத்தில் முடித்து அந்த சுட்டிப்பையனின் வாழ்த்துகளோடு கையினால் செய்யப்பட்ட அந்த அழகான மெடலை பெற்றபோது கிடைத்த சந்தோஷத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது..

எனக்கு நானே கேட்டுக்கொண்ட 'முடியுமா?'என்ற கேள்விக்கு விடையாக இதோ "முடித்துவிட்டேன்"என்ற பதிலை தந்தேன்.. இந்த மலையோட்டம் எனக்கு தந்த அனுபவங்கள் நிறைய.. சக்தி அனைத்தும் வடிந்துபோன உடலை மல்லாக்க தரையில் கிடத்த ... ஏற்பாட்டாளர்களில் ஒருவர் ஓடி வந்து "என்னவாயிற்று? ஏதாவது உதவி தேவையா?" என கேட்க.. 'அதிக மகிழ்ச்சியில் படுத்திருக்கிறேன்.. ஒன்றுமில்லை' என்றதும் "கன்கிராட்ஸ்"என்றவாறு புன்னகைத்து நகர்ந்தார்.


சிறிது நேரம் கடந்ததும் ரவி வந்துசேர அடுத்த கால்மணியில் Dr.சிவராஜ் வந்து சேர்ந்தார். ஹோட்டலிலிருந்து RG ம் எனை அழைக்க வந்திருந்தார்.. உடன் சென்னை CTC குழுவை சார்ந்த ஹனீபா, அஸ்வதியுடன்... ரஞ்சித்தும் ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
ஹோட்டல் சென்று குளித்து முடித்து தயாராகி மதிய உணவிற்கு கிளம்பினோம். காலையிலேயே சாப்பிடாததால் பசி பலமடங்கு எகிறி நின்றது.

திரு.ரஞ்சித் வழிகாட்டலுடன் அனைவரும் கிளம்பி வழியில் ஒரு சாலையோர உணவகத்தில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி வருவல் என அட்டகாசமான உணவு. விருந்தோம்பலை மிக வித்தியாசமாக அனுபவித்து செய்துகொண்டிருந்தார்.. ரஞ்சித்..



உணவை முடித்ததும் அடுத்த கேள்வி..
"சார்.. என்ன வேண்டும்?" ஏதாவது வாங்கவேண்டுமா?" என்று.
இப்போது நாங்கள் மிரட்ட ஆரம்பித்தோம்... அன்பால்.. "ஆமாம்... வாங்கனும்.. இடத்தை மட்டும் காட்டுங்கள்.. இல்லாவிட்டால் சொல்லுங்கள்.. நாங்கள் இப்படியே கிளம்புகிறோம்.." என்றதும்... 'அய்யய்யோ.. வாங்க சார்.. காட்டுகிறேன்..' என தேன், அன்னாசி, நாட்டு இஞ்சி, கருமிளகு, கிராம்பு, பிஞ்சி பலாக்காய் என அனைத்தையும் உடனிருந்து தரமாக, குறைந்தவிலையில் வாங்கிட உதவினார்.

எங்களுக்கு முதல்நாள் மாலையில் இருந்து ஞாயிறு மாலைவரை உடனிருந்து எங்களை விருந்தோம்பலால் திக்குமுக்காட செய்துவிட்டார். வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு நல்ல மனிதரை, நண்பரை கொடுத்ததில் பெரும்பங்கு இந்த வல்வில் ஓரி ஓட்டத்தையே சேரும்.
இந்த அத்தனைக்கும் காரணம் துபாயில் இருந்தபடி ஈரோடு Dr.ரமேஷ்குமாரை அவ்வப்போது தொடர்புகொண்டு எங்களது நடவடிக்கையை கேட்டபடியும், செய்யவேண்டியவைகளை சொல்லிக்கொண்டும் வாட்சப் வழியே வழிநடத்திக்கொண்டிருந்தது.. திருமதி Dr.Priya.. நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களுக்கும், ரமேஷுக்கும், உடனிருந்து கவனித்த ரஞ்சித்துக்கும் அனைவர் சார்பிலும், U2 சார்பிலும் பேரன்பும், பிரியங்களும்...



52 கி.மீ ஓடிய அனுபவத்தை விட வாழ்வில் மறக்கமுடியாத நெகிழ்வான அனுபவம் இது.. இத்தனை உள்ளங்களை சம்பாதித்து தந்த "உள்ளத்தனைய உடல் " குழுமம் அதன் வீரியத்தை, அன்பை அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கிறது.
அறுவரோடு கீழ்நோக்கி பயணித்த வாகனம் வாழப்பாடியில் காபி, சிற்றுண்டி முடித்து என்னை இறக்கிவிட்டு ஐவரோடு சென்னை நோக்கி பயணித்தது...


பயணத்தின் போது வயிறு வலிக்க காரணமான.. இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வாசகங்கள்...
* மாருதி காருக்கு என்ஜின் தேவையில்லையா?
* பிரேக்க போடு..
* சாருக்கு ரசத்த ஊத்தே...
* க்கல்ல்லம்ம்மிட்ட்ட்டாஆஆய்ய்...
மீண்டும் அடுத்த இலக்கை நோக்கி நகர துடிக்கும் எனது மனதை கட்டுப்படுத்த யார் உளர்? என்னைத்தவிர..!

No comments:

Post a Comment

"மூளைக்கட்டிகாரனான நானும் எனது மாரத்தானும்..." - பாலமுரளி, வாழப்பாடி.

அனைவருக்கும் வணக்கம்... நான் பாலமுரளி.. வயது 50.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாய் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் எனது...