Sunday, March 8, 2020

ஏற்காடு அல்ட்ரா மாரத்தான் (திருவிழா) 2020


ஏற்காடு அல்ட்ரா மாரத்தான் (திருவிழா) 2020

கடந்த ஞாயிறு (16.02.2020) நடந்து முடிந்த இந்த திருவிழாவின் தாக்கத்திலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. எப்போதும் விருப்பமான இடங்களில் நடைபெறும் ஓட்டங்களில் கலந்துகொண்டு அதன் அனுபவங்களை முகநூலில் எழுதுவது வழக்கம். ஆனால் எனது தலைமையிலான சேலம் ரன்னர்ஸ் குழுவால் இம்முறை நடத்தப்பட்ட இந்த ஏற்காடு மாரத்தான் திருவிழாவால் கற்றதும் பெற்றதும் நிறைய. வெவ்வேறு விதமான அனுபவ பாடங்கள். அத்தனையும் எழுத வேண்டுமா? என்ற கேள்வி ஒரு புறம். உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் மற்றவர்களும் அறிவது அவசியம் என்பதால் இந்த (தாமதமான) மிக நீண்ட கட்டுரை. இந்த ஏற்காடு அல்ட்ரா மாரத்தானின் வெற்றிக்கு பின்னால் இத்தனை பேரின் உழைப்பும் இருக்கிறது என நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.

ஏற்காடு அல்ட்ரா முதல் முறை நடந்தபோது நான் 25 கி.மீ பிரிவில் கலந்துகொண்டு ஓடினேன். இரண்டாவது முறை நடந்தபோது நானும் குழுவில் ஒரு உறுப்பினராக மாறியிருந்ததால் தன்னார்வலராக செயல்பட்டேன்.  கடந்த அக்டோபர் மாதம் நான் சேலம் ரன்னர்ஸ் குழுவினரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் மூன்றாவது முறை பிப்ரவரி 2020ல் இந்த மாரத்தானை நடத்தும் பொறுப்பு எனது தலைமையிலான குழு என்பதால் இது என் முறை...

ஏற்கனவே நடந்த இரண்டு நிகழ்வுகளிலும் குறைந்த அளவு (150+) பங்கேற்பாளர்களை கொண்டு சிறப்பாக நடத்தியதன் விளைவாக பங்கேற்பாளர்கள் மத்தியில்  இம்முறை எதிர்பார்ப்பும், விரைவில் பதிவு செய்ய ஆர்வமும் அதிகமானது. இரண்டாவது நிகழ்வில் ஓட்ட நண்பர்கள் சிலரின் பின்னூட்டம் இன்னும் எண்ணிக்கையை கூட்டலாம்.. ஏதாவது குறைந்த தொலைவிலான பிரிவும் வைக்கலாம் என்பதாக இருந்தது. எதேச்சையாக இதை உள்வாங்கியபோது நானும் ஒருநாள் சேலம் ரன்னர்ஸ் குழுவின் தலைவராவேன் என்பது அப்போது தெரியாது.

பதிவுகள்:
மூன்றாவது ஏற்காடு அல்ட்ரா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடங்க வேண்டிய சூழலில் புதிதாக 12.5 கி.மீ தூர பிரிவை வெளியூரிலிருந்து குழுவாக (சுற்றுலா) வரும் நண்பர்களுக்காக 100 பதிவுகள், 25 k பிரிவில் 100 பதிவுகள், 50 k பிரிவில் 50 பதிவுகள் மட்டும் என்ற கணக்கில் துவங்கினோம். புதிய முயற்சியாக ஓட்டக்குழுக்களுக்கு (குழுவாக பதிவு செய்பவர்களுக்கு) தள்ளுபடி வழங்க முடிவு செய்தோம். எனது தாய்க்குழுமமான உள்ளத்தனைய உடல் குழுவின் நிறுவனர் ஷான்ஜியின் பங்கேற்பு மற்றும் அறிவிப்பால் உள்ளத்தனைய உடல் குழுவில் இருந்து  சுமார் 50  நண்பர்கள் குழுவாக பதிவு செய்தனர். இது ஒரு குடும்ப சந்திப்பாக அமையும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

ஆச்சரிப்படும் வகையில் பதிவுகள் மிக விரைவில் முடிந்து போனது. மேலும் நிறைய விசாரணைகள் வர ஆரம்பித்தது. இதனால் பதிவுகளை அதிகரிக்கவேண்டிய சூழல். அவ்வாறு அதிகரித்தால் ஓட்ட நண்பர்களை சரியான முறையில் கவனித்து அனுப்ப இயலுமா? என்ற சந்தேகம் குழு நண்பர்கள் மத்தியில். அதிகரிக்க வேண்டாம் என்ற சிலரின் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் பலரின் ஆதரவோடு எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த முடிவு செய்தோம். அதாவது 50 k பிரிவில் 100, 25k பிரிவில் 200, 12.5 k பிரிவில் 200 என்ற எண்ணிக்கையில். இதை நினைக்கையில் பெரிய பதட்டமும் தொற்றியது. காரணம் முந்தைய நிகழ்வுகளைக்காட்டிலும் இரண்டு மடங்கு எண்ணிக்கை அதிகம். ஆனாலும் குழு நண்பர்கள் துணையோடு கண்டிப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே பிரதானமாக தெரிந்தது.

குழு பதிவுகள் என்ற வகையில் உள்ளத்தனைய உடல் (U2).. Bessie Dreamers, Chennai.. Bessie Flyers, Chennai.. SBC Striders, Covai.. Run T Nagar Run, Chennai.. Erode Road Runners , Erode.. மற்றும்  Royal Runners, Covai.. ஆகிய குழுக்களின் பதிவால் பாதிக்கும் மேலான பதிவுகள் மற்றும் Town Script மூலமாக பாதி பதிவுகள் என அனைத்தும் குறுகிய காலத்தில் தீர்ந்தது. குழு பதிவுகளை ஒருங்கிணைத்த Moorthi Erode, Mrs.Malar, Mr.Aga Stalin, Banuchandar, Mr.Varadharajan, ERR Pressi  மற்றும் Royal Dr.Balu ஆகியோருக்கு தனிப்பட்ட நன்றிகள்.

தொடக்க / முடிவு இடம்:
500 பதிவுகள் முடிந்த நிலையில் அதற்கு ஏதுவான நிகழ்வு தொடங்கும் இடத்தை தேடினோம். Dr.ரமேஷ் அவர்கள் துணையோடு ஏற்காடு முன்னாள் தலைவர் முரளி அண்ணன் வழிகாட்டுதலில் மான்ஃபோர்டு பள்ளியை அணுகியபோது தவிர்க்க இயலாத காரணத்தால் முடியாது போக ஏரி அருகே அரசு பள்ளியை பார்த்தோம். இந்த இடம் கடைசி கட்டத்தில் இடம் ஏதும் கிடைக்காதபோது உபயோகிக்கலாம் என மனதில் குறித்து வைத்துக்கொண்டு மேலும் சில காபி தோட்டங்களை குறிவைத்து தேடினோம்.


இடையில் முரளி அண்ணன் மூலம் அதிர்ஷ்டவசமாக கிடைத்த இடம்தான் Retreat. பெரிய விளையாட்டு மைதானம், தங்குமிடம், உணவு வசதி மற்றும் இயற்கை அழகு சூழ்ந்த இடம் என அனைத்தும் ஓரிடத்தில் இருந்ததால் உடனடியாக இடத்தை பதிவு செய்தோம். முரளி அண்ணன் அவர்களின் தோழமை,  அவரது சொந்த ஹோட்டலில் தங்கும் ஓட்ட வீரர்களுக்கு சிறப்பு தள்ளுபடி, The Retreat மற்றும் இதர எத்தனையோ உதவிகள் என அத்தனைக்கும் காரணமான துபாயில் வசிக்கும் சேலம் ரன்னர்ஸ் குழு உறுப்பினர், எனது மரியாதைக்குரிய தோழி  பிரியா சுவாமிநாதன் மற்றும் ஏற்காட்டில் இடத்தை தேர்வு செய்ய கிளம்பும்போது நானும் உடன் வருகிறேன் என  பரபரப்பான பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் ஈரோட்டிலிருந்து கிளம்பி வந்து எங்களோடு இணைந்து இரண்டு மூன்று ஞாயிறுகளை எங்களுக்காக தியாகம் செய்திட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் Dr.ரமேஷ்குமார் ஆகியோருக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாதுதான். ஆனாலும் குழுவின் சார்பில் நன்றிகள்..

ஓடுபாதை:
இடம் முடிவானதும் கடந்த ஆண்டுகளில் இருந்த ஓடுபாதையா? வேறு பாதையா? என பார்த்த போது கடந்த ஆண்டு இருந்த பாதையில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சாலை மிக மோசமாக பழுதடைந்து அபாயகரமாக இருந்தது. விஷப்பரிட்சை வேண்டாமென அந்த பாதையை தவிர்த்தோம். அதனால் புதிய வேறோரு பாதைக்கு தயாரானோம். 50 கி.மீ பிரிவிற்கு அழகான, இயற்கை எழில் கொஞ்சும் 33 கி.மீ  நீள ஏற்காடு to ஏற்காடு வட்டப்பாதையை தேர்ந்தெடுத்தோம். மீதமுள்ள தூரத்திற்கு தலைச்சோலை அருணாச்சலேஸ்வரர் கோவில் செல்லும் வழியில் பாதி சென்று திரும்புமாறும் தொடக்க இடத்தில் 1 கி.மீ தூரம் இருக்குமாறும்  செய்தோம்.

நிகழ்வில் அனைவராலும் பாராட்டப்பட்ட கடைசி ஒரு கி.மீ ட்ரையல் பாதை உருவான விதம் எங்களுக்கே ஆச்சர்யம் தான். கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து ஆள் உயரம் அடர்ந்து வளர்ந்திருந்த புதர் மற்றும் முள் செடிகளை தாண்டி நுழைந்து பார்த்தபோது அவசியம் இதன் வழியாக முடிக்க வைக்க வேண்டும் என்று முடிவானது. காரணம் இயற்கை எழில் சூழ்ந்த இந்த அழகை நல்ல வெளிச்சத்தில் கண்டு ரசித்து ஓட அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடிவெடுத்தோம். அந்த பாதையை சுமார் 7 மணிநேரம் JCB கொண்டு செப்பனிட்டு புதர் மற்றும் முள் மரங்களை அகற்றி "ட்ரையல்" என்றால் எப்படி இருக்கும் என அனைவரும் தெரிந்துகொண்டு இயற்கையோடு இணைந்து ஓடட்டும் என வைத்த அந்த ஒரு கி.மீட்டர் பாதை ஒட்டுமொத்த நிகழ்விற்கும் முத்தாப்பாக அமையும் என அப்போது நினைக்கவில்லை.

தொடக்க இடத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு பிரிவின் ஓடுபாதையிலும் ஓடுபவர்களுக்கு குழப்பம் ஏதும் வராத வண்ணம் முழுமையாக சாலைகளில் குறியிட்டும் பேனர்கள் வைத்தும் Route Marking பணிகளை செவ்வனே செய்து முடித்த Santy, Yeruva, Asisf, Jana மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

IQ303 (Timing Partner):
ராசிபுரம் மாரத்தானில் பணியாற்றி இருந்தாலும் புதியவர்களாக இருக்கிறார்களே.. சரியான அனுபவம் இருக்குமா? என்று எண்ணியபோது துணிந்து ஒப்படைத்த பொறுப்புகளை பிசகாமல் செய்த ஶ்ரீனிவாஸ் குழுவினர்க்கும் அறிமுகம் தந்த ராசிபுரம் சுரேஷ்குமார்க்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

உதவி மையங்கள் & தன்னார்வலர்கள்:
சேலம் ரன்னர்ஸ் குழு இதுவரை நடத்திய நிகழ்வுகளில் தன்னார்வலர்களின் பங்களிப்பு  மற்றும் உதவி மையங்கள் பிரதான பங்கு வகித்தது. இம்முறை அதில் எள்ளளவும் குறை இருக்கக்கூடாது , ஒருபடி மேலாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மொத்தம் 11 உதவி மையங்கள் 5 கி.மீ க்கு ஒன்று வீதமும் கடைசி சில கி.மீ தூரத்திற்கு 3.5 கி.மீக்கு ஒன்று என்றவாறு அமைக்க முடிவு செய்தோம்.  ஒருங்கிணைக்கும் பொறுப்பை திருமதி.பாவை, சான்ட்டி, ஜனா மற்றும் மோகன் போன்ற குழுவின் மூத்த உறுப்பினர்கள் வசம் ஒப்படைத்தோம். குழுவில் இருந்தும் குழு நண்பர்கள் மூலமாகவும் தன்னார்வலர்கள் கிட்டத்தட்ட 65 பேர் பதிவு செய்தனர்.  வாட்சப் குழுவில் தொடங்கி தனித்தனியே பேசி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டதன் பலன் நிகழ்வில் கண்கூடாக தெரிந்தது. ஒவ்வொரு உதவிமையத்திற்கும் அணித்தலைவரை நியமித்து தேவையான பொருட்களை வாங்கி சேகரித்து தனித்தனியே காரில் ஒவ்வொரு உதவி மையத்திற்கும்  பிரித்து அனுப்பியது என இவர்களின் பங்களிப்பு அபாரமானது. நால்வருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக கோவை , சென்னை மற்றும் இதர பகுதிகளில் இருந்து தாமாக முன்வந்து தன்னார்வலர்களாக செயல்பட்ட ஓட்ட நண்பர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அபாரம்.

ஸ்பான்சர்:
கடந்த ஆண்டு டீ-சர்ட் தேவையெனில் பங்கேற்பாளர்கள் பணம் கொடுத்து பெற்றுக்கொண்டார்கள். இந்த ஆண்டு ஸ்பான்சர் தேடி டீ-சர்ட் நினைவுப்பரிசாக வழங்கலாம் என முடிவெடுத்து செயல்படுத்த முனையும் போது Dr.சிவராஜ் அவர்களின் உதவியோடு சேலம் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினோம். எதற்கும் யோசிக்காமல் கேட்டவுடனே சம்மதித்தார்கள். உடனே மக்கள் தொடர்பு அதிகாரி குரு தொடர்புகொண்டு அதற்கான ஆயுத்த பணிகளை துவங்கினார். மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதியும் தந்து தங்கள் அலுவலர்கள் நால்வரோடு வந்து ஏற்காட்டில் தங்கி ஓட்டம் துவங்கிய அதிகாலை வேளையில் ஓடுபாதைகளில் உலாவந்த திரு.குரு மற்றும் மணிப்பால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
      இரண்டாவதாக ANS திவ்யம் ஜுவல்லர்ஸ் திரு.ஶ்ரீபதியை அணுகியபோது IQ 303 Timing Partner க்கான பெரும்பகுதி தொகையை ஏற்க மனமுவந்து முன்வந்தார்.
தரமான டீ-சர்ட் தேர்ந்தெடுத்ததில் மச்சி பார்த்தி பரிந்துரைத்த 42KM Store அபியை அணுக அவரும் மகிழ்வோடு சம்மதித்தார்.

மெடல்:
வழக்கமாக YHU ல் வழங்கப்படும் மெடல்கள் இயற்கையோடு இயைந்ததாக தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இம்முறையும் அதே போல சிற்சில முன்னேற்றங்களுடன்.. 8x6  18 MM அளவுள்ள ரப்பர் மர பலகை வாங்கி துண்டுகளாக வெட்டி துளையிட்டு வழவழப்பானதாக தேய்த்து அதன்பின் வெண்ணந்தூர் நண்பர் A1 ஆனந்திடம் தந்து லேசர் பிரிண்ட் (Engraved) செய்து பின்னர் மல்டி கலரில் பிரிண்ட் செய்த ரோப்பில் மாட்டி அழகான மெடலாக பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. மரத்துண்டுகளாக துளையோடு இருந்தவைகளை கைகளாலும், மெஷின் மூலமாகவும் தேய்த்து வழவழப்பாக மாற்றிய பெருமை சேலம் ரன்னர்ஸ் குழுவின் பொருளர் மோகன் மற்றும் துணைத்தலைவர் கோபி ஆகியோரையே சாரும். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...

புகைப்படம்:
ஏற்கனவே டிசம்பரில் நடந்த ராசிபுரம் மாரத்தானுக்கு பரிந்துரைத்து அங்கு மிக சிறப்பாக செயல்பட்ட M Media மூர்த்திக்கு இங்கும் வாய்ப்பளிப்பது என்ற முடிவு எவ்வளவு சரியானது என்பதை ஒவ்வொருவரும் ஒட்டுமொத்தமாக "ப்ப்பாஆ... போட்டோஸ்லாம் செமையா வந்திருக்கு சார்/அண்ணா/ ங்க என்ற பாராட்டில் தெரிந்தது. போட்டோக்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை YHU பிரேமில் வைத்து YHU FB பக்கத்தில் பதிவேற்றம் செய்த அத்தனை பெருமையும் மூர்த்தி மற்றும் குழுவினரையே சாரும். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும் மூர்த்தி.

ஜூம்பா:
வழக்கமாக எங்களது நிகழ்வுகளில் குழுவில் மூத்த உறுப்பினர்கள் யாராவது ஒருவரின் மேற்பார்வையில் ஓட்டத்திற்கு முன்பாக வார்ம்அப் உடற்பயிற்சி மட்டுமே நடக்கும். இம்முறை ஜூம்பா பயிற்றுனர் பெங்களூர் தோழி வித்யாவிடம் பேசும்போது அவராகவே "தலைவா... நம்ம ஈவண்ட்ல ஜூம்பா வார்ம்அப் வைக்கலாமா? என்றதும் இதென்ன புதுசா? சரியா வருமா? என்றவாறு யோசித்தேன். காரணம் அவரும் 25 கி.மீ பிரிவில் ஓட இருந்தார். மேலும் இதற்காக மேடை, ஒலி & ஒளி அமைப்புகள் மற்றும் மெனக்கிடல் தேவைப்பட்டது. அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மேல் பாரத்தை வைத்து முயற்சித்தோம். பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் சிறிது கூச்சத்தில் நெளிந்தாலும் பின்னர் அனுபவித்து பயிற்சியை தொடர்ந்தனர். 50 k மற்றும் 25 k பிரிவில் ஓடும் நண்பர்களுக்கு பயிற்சி தந்ததோடு அவசரமாக தயாராகி 25k பிரிவில் ஓடவும் ஆரம்பித்தார். இவரின் ஜூம்பா வெற்றியை பலரின் பின்னூட்டங்கள் பறை சாற்றியது என்றால் மிகையாகாது. மிக்க நன்றி.. வித்யா..
12.5 k பிரிவில் ஓடுபவர்களுக்கு அழகாக வார்ம்அப் பயிற்சி தந்த குழுவின் செயலர் கார்த்திக்கு நன்றிகள்.

பிசியோதெரபி:
சேலம் பிசியோ பவுண்டேஷன் கதிர் கடந்த ஆண்டும் நம்மோடு இணைந்து செயல்பட்ட போது கிடைத்த பின்னூட்டங்கள் மிகப்பெரிய நம்பிக்கையை தந்திருந்தது. செயலர் கார்த்தியின் மூலம் இம்முறையும் கதிர் குழுவினரை இணைத்துக்கொண்டோம். ஓடி முடித்துவிட்டு வரும் அத்தனை பேருக்கும் மிக சிறப்பாக, அழகாக, அன்போடு பிசியோதெரபி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற கதிர் மற்றும் குழுவிற்கு தனிப்பட்ட நன்றியும், பாராட்டுகளும். 

டைமிங் மேட் வைக்கும் இடங்களில் போக்குவரத்தை சீர் செய்ய அந்த உபகரணஙகளுக்கு பாதிப்பு வராமல் இருக்க பிரதிபலிப்பான்களுடன் கூடிய கூம்பு வடிவ தடுப்பான்கள் தேவைப்பட்டபோது விலைக்கு எங்கே கிடைக்கும்? என காவல்துறையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் எனது சகோதரர் துரைமுருகன் அவர்களிடம் விசாரித்த போது தேவைக்கான காரணம் கேட்டறிந்து உடனடியாக காவல்துறை மூலமாக அவரது கட்டுப்பாட்டில் இருந்ததில் தேவையான அளவு வழங்கினார். அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

உதவிமையங்களுக்கு தேவையான தண்ணீர் கேன்கள் ஏற்காட்டில் விலை அதிகம் என்பதால்  சேலத்தில் இருந்தே கொண்டு செல்ல முடிவு செய்தோம். நண்பர் Dr.ரமேஷ் அவர்களிடம் இதை சொன்னபோது விசாரித்து தகவல் சொல்வதாக சொன்னவர் ... தனது நண்பர் மூலமாக  விலையில்லாமல் 100 கேன்கள் பெற்றுத்தந்தார். அவருக்கும் அவரது நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சேலம் ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்களில் 2020 ன் பெருமைமிக்கவர்களை கௌரவிக்கவும், 50k & 25 k பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மற்றும் குழுவாக பதிவு செய்த ஓட்டக்குழுக்களை ஊக்கப்படுத்தவும் நினைவுப்பரிசு வழங்க முடிவெடுத்து அதற்கான பொறுப்புகளை ஏற்று தனது சொந்த ஹோட்டல் திறப்புவிழா பணிகளுக்கும் நடுவே மிக சிறப்பாக செய்திட்ட குழுவின் துணைத்தலைவர் திரு.கோபி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

மேலும் அன்றைய தினம் மாலையில் நடந்த நிகழ்வில் சேலம் ரன்னர்ஸ் கிளப்பில் 2020 ஆண்டின் பெருமைமிக்கவர்களாக மூத்தோர் தடகளத்தில் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற நளினி மேடம், இரண்டு முறை அயல்நாட்டில் அரை இரும்பு மனிதன் முடித்த நண்பர் சிவக்குமார், இவர்களின் வரிசையில் மால்நாடு அல்ட்ரையல் 80 கி.மீ முடித்ததற்காக என்னையும்  சேர்த்து கௌரவப்படுத்திட்ட குழுவின் அனைவருக்கும் குறிப்பாக கோபி சாருக்கு மனமார்ந்த நன்றிகள்..

உள்ளத்தனைய உடல் குடும்ப சந்திப்பு:
2019 ல் நடந்த 100 நாள் ஓட்ட சவாலை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கும் நிகழ்வை ஏற்காட்டில் வைத்து குழுவின் நிறுவனர் ஷான்ஜியின் கரங்களால்   நேரில்  வழங்க முடிவு செய்திருந்தோம். 50 k ஓட்டத்திற்கு பதிவு செய்திருந்தபோதும் தவிர்க்க இயலாத காரணத்தால் அவரால் வர இயலாமல் போனது வருத்தமே.  எனவே ராஜ்குமாரும் நானும் இணைந்து நிகழ்வை முடித்தோம். பாராட்டும் மெடலும் பெற்றவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. இதுவரை முகநூலில் மட்டுமே பார்த்த, பேசிய  பலரையும் குடும்பத்தோடு சந்தித்து அளவளாவியதில் மட்டற்ற மகிழ்ச்சி.. இந்த நிகழ்வுக்கு வராத நட்புகளுக்கு கொரியர் வாயிலாக அனுப்ப முடிவு செய்து அப்போதைக்கு கலைந்தோம்.

மைதானத்தில் :
என்னோடு முதல்நாள் மாலை முதல் மறுநாள் மாலை  வரை மைதானத்தில் என்னுடனேயிருந்து சிக்கலான சமயங்களில் உதவிட்ட நண்பர் ராஜ்குமார்-க்கு ... தவறியும் நன்றி சொல்லமாட்டேன்..
மேலும் அதிகாலை 3:30 மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மைதானத்தில் இருந்த உதவி மையம் மற்றும் மெடல் வழங்கும் இடம் என சலிப்பின்றி பணியாற்றிய ரமாபிரியா மேடம், நளினி மேடம், பிங்கி மேடம் மற்றும் இவர்களுக்கு உதவியாக  இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

காலத்தினால் உதவிய சௌந்தர்:
நிகழ்வு துவங்க சில மணி நேரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிர்வாக பிரச்சினையால் நிகழ்வு எப்படி நடக்கப்போகிறது? என்ற கேள்வியோடு மிக  கடினமான, பதட்டமான சூழ்நிலையில் இருந்த எங்களுக்கு துணைநின்று  நிகழ்வை வெற்றிகரமாக நடத்திட உதவிட்ட சேலம் சௌந்தரராஜன் மற்றும் தேவிக்கு (இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. தேவி) எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

ஏற்காடு மாரத்தான் நிகழ்வுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் திரட்டி ஓரிடத்தில் சேர்த்து அதனை தனித்தனியே பிரித்து பாதுகாப்பாக அனுப்பும் வரை பாதுகாப்பான இடத்தை வழங்கிய சேலம் Pioneer Sports Club நிர்வாகத்திற்கும், உடனிருந்து அத்தனைக்கும் ஒத்துழைத்ததோடு  தன்னார்வலராக குடும்பத்தோடு பணியாற்றிய மேலாளர் திரு.செல்வா மற்றும் திருமதி. செல்வா ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஏற்காடு அல்ட்ரா மாரத்தான் பதிவுகள் தொடங்கிய சில நாட்கள் முன்பிருந்து நிகழ்வு முடிந்த பிறகும் இன்றுவரை அத்தனையிலும்  பரபரப்பான வழக்கறிஞராக தனது பணி பளுவிற்கும் நடுவிலும் என்னோடு துணை நின்று தோள் கொடுத்து உதவிவரும் செயலர் கார்த்திகைகுமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பங்கேற்பாளர்கள் அனைவரின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்து தராதவர்களை போன் மற்றும் வாட்சப் வழியே தொடர்புகொண்டு, பெற்று பட்டியல் தயாரித்ததில் அவரின் பங்கு மிக அதிகம்.

50 k, 25 k பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவர்களை கௌரவித்ததோடு நிகழ்வு முடிந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுக்கான நிறைய எதிர்பார்ப்புகளும் கூடியது.

நாம் எவ்வளவு தான் திட்டமிட்டு பணியாற்றினாலும் சூழ்நிலை சமயங்களில் நம்மை வைத்து செய்து விடும். அப்படி எதிர்பாராமல் நடந்த ஒன்று காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் மற்றும் பிப் வழங்க தேவையான பொருட்கள் இருந்த அறையின் சாவி கிடைப்பதில்  நடந்த தாமதம். உணவு வழங்கும் இடத்தில் தன்னார்வலர்கள் இல்லாமல் போனதும் காலம் கடந்தும் காலை உணவு வழங்கியதால் மதிய உணவு ஏற்பாடுகளில் தாமதமானதும்தான் மாபெரும் சொதப்பல். இதனால் 50 k ஓடி முடித்த நண்பர்களுக்கு எங்களால் ஏற்பாடு செய்திருந்த மதிய அசைவ உணவை தாங்களாகவே  தவிர்த்தவர்கள் தவிர இதர நண்பர்கள் தாமதமானதால் கிளம்பியது நெஞ்சில் பெரும் பாரத்தை சுமக்க செய்தது.

இது ஓட்டம் தாண்டி "சோறு முக்கியம் பாஸ்" என்ற கொள்கையுள்ள, மிகச்சிலருக்கு மன உளைச்சலை உண்டாக்கி இருக்கிறது.  இதற்காக தலைவர் என்ற முறையில் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
மேலும் இது விளையாட்டு உணர்வுள்ள ஓட்ட நண்பர்கள் கலந்துகொள்ளும்  மாரத்தான்  பொது நிகழ்வு என்றாலும்  வரும் அத்தனை பேரையும் 100% திருப்தி படுத்த இயலாது. ஒவ்வொருவரின் ரசனைகள், தேவைகள் மற்றும் புரிதல்கள் ஒரே மாதிரி இருக்காது. பின்னூட்டங்கள் என்ற பெயரில் 4.5 முதல் 5.5 கி.மீ-க்கு உள்ளாக  அத்தனை பொருட்களும் நிறைந்திருந்த உதவி மையங்கள், யாருக்கும் எந்த விதத்திலும் சந்தேகம் ஏற்படாத வகையில் இடப்பட்ட ஓடுபாதை குறியீடுகள், இயற்கையோடு இயைந்த வழக்கமான எங்களது Eco-Friendly மெடல் மற்றும் ஓடுபாதைகளில் அவசர உதவிக்கு ஆங்காங்கே காத்திருந்து, வலம்வந்து உதவிக்கொண்டிருந்த மணிப்பால் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் 3 பைக், 2 கார் பைலட்டிங் என அத்தனையிலும் குறைகள் காணும் சிலரது அனுபவங்கள் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தில் இருப்பதையே இது காட்டுகிறது.

ஏற்காடு அல்ட்ரா மாரத்தான் 2020 நடைபெற ஒத்துழைப்பு நல்கிய, நான் குறிப்பிடாமல் விடுபட்டுப்போன குழு சார்ந்த, சாராத அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். ஓட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தன்னார்வலர்கள் என யாருக்கேனும் எங்காவது ஒரே ஒரு அசௌகரியமாவது நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்று எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி வரும் நாட்களில்/நிகழ்வுகளில் நிச்சயம் எந்தவித தவறுகளும்  நிகழாமல் மென்மேலும்  மெருகேற்ற குழுவாக பாடுபடுவோம்.  மேலும் நிகழ்வின் வெற்றியில் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இருக்கிறது. ஒரு தலைவராக இந்த வெற்றியை  அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.  நடந்து முடிந்த நிகழ்வை பற்றி அலைபேசி, வாட்சப், முகநூல் மூலம்  உண்மையான, அன்பான பின்னூட்டங்கள் மற்றும் கருத்துகள் வழங்கிட்ட, இனி வழங்கப்போகும்  அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்..

எனது குழு.. எனது பெருமை:
ஓட்டப்பயணம் தொடங்கிய இந்த மூன்று ஆண்டுகளில் இந்நிகழ்வு எனக்கு மிகப்பெரிய மைல்கல். எனக்கு நானே கேட்டுக்கொண்ட பல கேள்விகளுக்கான பதில். எனது நம்பிக்கையின் பலத்தை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. முடியுமா? முடியாதா? என்ற கேள்வியை தவிர்த்து சிறப்பாக முடிக்க வழியை தேடச்சொல்லியிருக்கிறது. தேடி முயன்று ஓரளவு முடித்திருக்கிறேன். நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தது, சேலம் ரன்னர்ஸ் குழுவில் 2020- ம் ஆண்டின் பெருமைமிக்கவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்து கௌரவித்தது,  எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக ஏராளமான ஓட்ட நண்பர்களை சந்தித்து நட்புகளை அள்ளியது என இன்னும் அசை போட ஏராளம் இருந்தாலும்  அனைத்திற்கும் அச்சாணி உள்ளத்தனைய உடல் குழுமம்  என்பதுதான் எனது ஆகச்சிறந்த பெருமை...

தாமதமான இந்த நீண்ட பதிவை பொறுமையோடு படித்து கடந்த அனைவருக்கும் பலப்பல நன்றிகள்...

No comments:

Post a Comment

"மூளைக்கட்டிகாரனான நானும் எனது மாரத்தானும்..." - பாலமுரளி, வாழப்பாடி.

அனைவருக்கும் வணக்கம்... நான் பாலமுரளி.. வயது 50.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாய் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் எனது...